வேலூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடந்தபோது விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 49 பேர் வெற்றி பெற்றதாக அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
வாக்கு எண்ணிக்கை நேற்று தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், விஜய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 109 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தடுக்கப்பட்டிருப்பதாக புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காரர்களே பல இடங்களில் தோல்வியடைந்துள்ள நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் பெற்றுள்ள வெற்றி, முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாட்டிமானப்பல்லி ஊராட்சி 6-வது வார்டில் விஜய் ரசிகர் ஏழுமலை வெற்றி பெற்றார். தேர்தல் நேரத்தில், அப்பகுதி மக்கள் திருட்டு பயம் குறித்து வேட்பாளர்கள் பலருடமும் அச்சப்பட்டுள்ளனர். தெருக்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஊர்மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே விஜய் ரசிகர்கள் கண்காணிப்பு கேமராக்களை அந்த வார்டில் பொருத்தி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளனர்.