எங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கோங்க..! வான்டடாக வந்து வண்டியில் ஏறும் விஜய் – எஸ்ஏசி..!

By Selva KathirFirst Published Sep 5, 2020, 12:05 PM IST
Highlights

மதுரையை தொடர்ந்து சென்னையிலும் நடிகர் விஜயை அரசியலுக்கு வருமாறு கூறி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது ரசிகர் மன்ற தலைமையின் அனுமதி இல்லாமல் நடைபெற்று இருக்காது என்கிறார்கள்.

சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசுக்கு எதிரான காட்சிகள் அதிகம் இடம் பெற்று இருந்தன. இதனால் சென்னை, மதுரையில் சர்கார் திரைப்படம் ஓடிய திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயின் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் அதிமுக அரசுக்கு எதிராக ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டினர். இதனால் அந்த ரசிகர்களை குறி வைத்து போலீசார் வேட்டையாடினர். அன்று முதல் ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர் அடிக்கும் முன்பு தலைமையின் ஒப்புதலை பெற வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரசிகர் மன்றம் சார்பில் எந்தவித போஸ்டர் அடித்தாலும் அதனை தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே ரசிகர்கள் ஒட்ட அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் மதுரையில் நடிகர் விஜயை எம்ஜிஆர் போலும் அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதாவது நடிகர் விஜய் திரையுலகில் மட்டும் அல்ல அரசியல் களத்திலும் எம்ஜிஆர் போன்றவர் என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த போஸ்டர் காமெடியாக இருந்ததால் அது மீம்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் சென்னை ஈசிஆரில் மீண்டும் நடிகர் விஜயை எம்ஜிஆர் போல் ஒப்பிட்டு போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டரில் சீரியசான வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் மக்கள் திலகத்தின் மறு உருவமே, விரைவில் வருக நல்லாட்சி தருக என்று வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. மேலும் ஆளப்போறான் தமிழன் தளபதி 2021ல்? என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த போஸ்டரை அடித்திருந்தது இசிஆர் சரவணன் எனும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி. அதாவது இவர் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளராக இருக்க கூடியவர், மேலும் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவரும் கூட.

ரசிகர் மன்ற நிர்வாகியாக இருக்க கூடிய ஒருவர் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு போஸ்டரை அடித்திருக்க முடியாது என்கிறார்கள். மேலும் மதுரை, சென்னையில் ஒரே மாதிரி விஜயை எம்ஜிஆர் போல் சித்திரித்திருந்தனர். எனவே இதனை எதேச்சையானது என்று கடந்து சென்றுவிட முடியாது. ரசிகர் மன்ற தலைமை கூறியதற்கு இணங்க விஜயை எம்ஜிஆரோடு ஒப்பிட்டு இந்த போஸ்டர்கள் அடிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. திரைப்படங்களில் ஆரம்ப காலங்களில் நடிகர் வி’ஜய் தன்னை ரஜினி ரசிகராக அடையாளப்படுத்திக் கொண்டார்.

புதிய கீதை என்கிற படத்தில் அண்ணாமலை தம்பி இங்க ஆடவந்தேன்டா என்று பாடலே வைத்தார். அதாவது அண்ணாமலை என்பது ரஜினி என்று உலகிற்கே தெரியும் அவரது தம்பி என்று தன்னை கூறிக் கொண்டார் விஜய். ஆனால் அதன் பிறகு மாஸ் ஹீரோ ஆன பிறகு ரஜினியை விடுத்து தன்னை எம்ஜிஆர் ரசிகராக அடையாளப்படுத்த ஆரம்பித்தார் விஜய், ரஜினி தொடர்பான எந்த விஷயமும் தனது படத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொண்டார். வசீகரா படத்தில் முழுக்க முழுக்க எம்ஜிஆர் ரசிகராக விஜய் நடித்திருப்பார். போதாது என்று நடிகர் ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்தோடு தனது சச்சின் படத்தை வெளியிட்டு அவருக்கு போட்டியாளராகவும் காட்டிக் கொண்டார்.

 

இதையும் படிங்க: “மக்கள் திலகத்தின் மறு உருவமே”... மீண்டும் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விஜய்... சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்...!

இப்படி எம்ஜிஆரை துவக்கம் முதலே அவர் தூக்கிப் பிடிப்பது அவரது பாணியில் அரசியல் செய்யத்தான் என்கிறார்கள். மேலும் தற்போது அதிமுக அதிகாரத்தில் உள்ளது. அதிமுகவின் அடையாளங்களில் ஒருவராக எம்ஜிஆர் உள்ளார். இப்படி இருக்கும் போது விஜயை எம்ஜிஆரோடு ஒப்பிட்டு போஸ்டர்கள் அடிக்கப்படுவது ஆளும் கட்சியான அதிமுகவை சீண்டிப்பார்க்க என்கிறார்கள். மேலும் விஜய் ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடிப்பது அதிமுகவை சீண்டி பிரச்சனை எனும் வண்டியில் வாண்டடாக விஜய் மற்றும் எஸ்ஏசி ஏறுவது போன்றது என்றும் கூறுகிறார்கள்.
 

click me!