உள்ளாட்சித் தேர்தலுக்கு தல - தளபதி கூட்டணி..? அஜித் ரசிகர்களை வளைக்கும் விஜய் மக்கள் இயக்கம்...

By Ganesh RamachandranFirst Published Dec 6, 2021, 1:02 PM IST
Highlights

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆதரவளிக்குமாறு பல மாவட்டங்களிலும் அஜித் ரசிகர்களிடம் பேசி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்

அஜித் - விஜய் ரசிகர்கள் தங்கள் மனம் கர்ந்த ஹீரோக்களுக்காக சண்டை போட்டுக்கொண்ட பல தருணங்களை நாம் அறிந்திருப்போம். வார்த்தைகள் முற்றி கைகலப்பில் முடிந்த பல அஜித் - விஜய் ரசிகர் சண்டைகளை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எத்தனையோ போஸ்டுகளில் பெரிய ஹீரோ யார்.. அஜித்தா..? விஜய்யா..? என்ற முட்டல் மோதல்கள் நடந்துள்ளன. இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, சினிமாவைத் தாண்டிய ஒரு விஷயத்தில் அஜித் ரசிகர்களுடன் கைகோர்க்க விரும்புகிறார்களாம் விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள்.

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி பலரையும் திரும்பிக் பார்க்க வைத்தது. ஆனால் தன்னுடைய ரசிகர்கள் தேர்தலில் போட்டி போடுவார்கள் என்றோ, அவர்களுக்கு வாக்களியுங்கள் என்றோ விஜய் சொல்லவில்லை. சத்தமில்லாமல் தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர் அவரது ரசிகர்கள். வென்றவர்களை அழைத்து பாராட்டி புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டார் விஜய். அடுத்து நடக்க உள்ள மாநகராட்சி மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் களமிறங்க தயாராகிவிட்டனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். அவர்களது திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள ஒரு சில நிர்வாகிகளிடம் பேசினோம்.

திருச்சி மாநகரை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் நம்மிடம் பல வில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். விஜய் அனுமதி கொடுத்த பிறகே தாங்கள் தேர்தலில் நிற்பதாகவும், யாரை வேட்பாளர்களாக அறிவிக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஆச்சர்யப்படுத்தும் தகவல் ஒன்றை அவர் நமக்கு சொன்னார். இந்த முறை அஜித் ரசிகர்கள் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டு வருவதாகவும், விஜய் - அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்தால் தங்கள் வெற்றி உறுதி என்றும் கூறினார். தல என்ற பட்டப் பெயர் கூட வேண்டாம் என்று எளிமை காட்டும் அஜித்தின் ரசிகர்கள் தேர்தல் களத்துக்கு வருவார்களா? என்று நாம் கேட்டபோது, ”அஜித் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று கூறினாலும் அவரது ரசிகர்கள் ஒற்றுமையோடு ஒரு பெரும் கூட்டமாகவே செயல்படுகிறார்கள். அதில் பலருக்கும் அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அவர்கள் பிரச்சாரத்துக்கு வர வேண்டும் என்றில்லை. விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தாலே நாங்கள் பெரும் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்துவோம்” என்றார் பெயர் வெளியிட விரும்பாத அந்த திருச்சிகாரர். இதன் காரணமாகவே அஜித் ரசிகர்களோடு சோசியல் மீடியாக்களில் சண்டை போடுவதை நிறுத்துமாறு விஜய் ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போடப்பட்டுள்ளதாம்.

click me!