
பா.ஜ.க.வின் தென்னிந்திய ஹெட்மாஸ்டராக இருந்தவர் வெங்கய்யா நாயுடு! தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா என நான்கு மாநிலங்களுக்கும் அடிக்கடி விசிட் அடித்து கட்சியின் வளர்ச்சிக்கு அசராமல் உழைத்தவர். அமித்ஷா, மோடியிடம் கூட நல்ல பெயர் வாங்கிவிட முடிந்த தென்னிந்திய பா.ஜ.க. நிர்வாகிகளால் வெங்கய்யாவை அவ்வளவு எளிதில் திருப்திப்படுத்திவிட முடியவில்லை. ஓடுங்கள்! உழையுங்கள்! என்று விரட்டிக் கொண்டேயிருந்தார்.
மத்தியமைச்சர் பதவியில் இன்னும் சில ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று நினைத்தவரை துணைஜனாதிபதியாக்கி டெல்லியில் அமர வைத்தது மத்திய அரசு. துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தவரிடம் நிருபர்கள் மைக் நீட்டியபோது “இனி எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நான் எல்லோருக்கும் பொதுவானவன். இந்த தேசமக்களின் நலன், வளர்ச்சிக்கு பாடுபடுவதே என் பணி.’ என்றார். ஆக வெங்கய்யா நாயுடு எனும் புயல் இனி டெல்லியில் மட்டுமே மையம் கொண்டு நின்றுவிடும் என்று நினைத்தனர் தென்னிந்திய பா.ஜ.க.வினர். சற்றே நிம்மதி பெருமூச்சு கூட விட்டனர்.
ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை! கடந்த சில வாரங்களாகவே வெங்கய்யா நாயுடு மீண்டும் தன் புயல் பணியை துவக்கிவிட்டார். ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மா இருக்க முடியாதல்லவா...அதைப்போல் வெங்கய்யாநாயுடுவாலும் சும்மா இருக்க முடியவில்லை.
இப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் டெல்லியிலிருந்து கிளம்பி, மும்பை, ஐதராபாத், சென்னை என்று ஒவ்வொரு மாநிலமாக வந்திறங்கும் அவர் அரசியல் சாராத நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார் அடிக்கடி.
முன்னாடியெல்லாம் தான் போய் இறங்கும் மாநிலங்களை சேர்ந்த பி.ஜே.பி. நிர்வாகிகளைத்தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு அலற விடுவார். அந்த பணி என்னவாயிற்று, இந்த திட்டம் என்னவாயிற்று, எத்தனை பொதுக்கூட்டம் நடத்துனீங்க? எத்தனை கண்டன கூட்டம் நடத்துனீங்க? என்று துளைத்தெடுப்பார்.
ஆனால் இப்போது தான் போய் இறங்கும் மாநில கவர்னர்களை துளைக்கிறாராம் வெங்கி. மத்திய அரசு அறிமுகம் செய்யும் மக்கள் நல திட்டங்களின் தற்போதைய நிலைகள் என்னென்ன? அதில் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது? பயனாளிகள் எத்தனை பேர்? குறை நிறைகள் யாவை? என்று கேட்டு விலாவாரியாக விலா நோக வைக்கிறாராம்.
வெங்கியின் செயல்கள் நேர்மறையானவைதான். ஆனாலும் தெறிக்கிறார்கள் கவர்கள்!