பலர் கொடுத்த அழுத்தத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

First Published Jan 18, 2018, 5:39 PM IST
Highlights
srivilliputhur jeeyar withdrawn his hunger protest demanding apology from vairamuthtu on andal issue


ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய கவிஞர் வைரமுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இன்று காலை 2வது நாளாக தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். ஆனால், அவரிடம் அரசு அதிகாரிகள் முதல், ஆன்மிகப் பெரியவர்கள் வரை பலரும் அழுத்தம் கொடுத்ததில், தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாகப் பேசியதாக ராஜபாளையம் பகுதி மக்கள் தொடங்கி, இந்து அமைப்புகள், பாஜக.,வினர் சிலர் என தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுதும் பரவலாக பல்வேறு இடங்களில் கண்டனப் பொதுக் கூட்டங்களும் ஆர்ப்பாடங்களும் நடைபெற்று வருகின்றன. வைரமுத்து வெறும் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது, கண்டனமும் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  தொடர்ந்து கவிஞர் வைரமுத்து மீது காவல் நிலையங்களில் ஆங்காங்கே புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, வரும் 16ஆம் தேதி மாலைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் கெடு விதித்தார்.  ஆனால் வைரமுத்து அதுபோல் மன்னிப்பு கோரவில்லை. மாறாக, சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் என தனக்கு ஆதரவு அளிக்குமாறு பலரிடம் கோரிக்கை விடுத்தார். அவருக்கு சினிமாத் துறையில் இருந்து இயக்குனர் பாரதிராஜா மட்டும் ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் நேற்று சில எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், குறித்த காலத்தில் வைரமுத்து மன்னிப்பு கோராததால், ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் தான் முன்னர் கூறியிருந்த படி, நேற்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இது தமிழகத்தில் ஆன்மிக அன்பர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அறைநிலையத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஆன்மிக பெரியவர்கள் என பலரும் அவருக்கு உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு நெருக்குதல் கொடுத்தனர். 

இருப்பினும் தனது உண்ணாவிரதத்தை இரண்டாவது நாளாகத் தொடர்ந்தார் ஜீயர். அவருக்கு ஆதரவாக பக்தர்களும் மடத்தில் திரண்டதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,  அறநிலையத் துறை அதிகாரிகளும், காவல் துறை உயரதிகாரிகளும் மீண்டும் ஜீயரிடம் வந்து, தகுந்த நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, அவரை சமாதானப் படுத்தினர். பலரது அழுத்தத்தின் காரணமாக, ஜீயர் தனது போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. 

click me!