
மூத்த பத்திரிகையாளர் ஞாநி உடலை தானம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் நன்றி தெரிவித்தனர்.
எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட ஞாநி என்கிற சங்கரன் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு காலமானார்.
இவர் சமூக விமர்சன நோக்குள்ள வீதி நாடகங்களும் மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். பரீக்ஷா என்ற நாடக குழுவை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும்படங்கள், நாடகங்கள் இயக்குதல் போன்ற பணிகளை அனைவரும் பாராட்டும்படி செய்து வந்தார். ஞாநி இயக்கிய பெரியார் குறித்த தொலைகாட்சிப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சிறந்த அரசியல் விமர்சகராக மிகச் சிறப்பான பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்த சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
எழுத்தாளர் ஞாநியின் விருப்பப்படி அவரது உடல், சென்னை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஞாநியின் உடல் தானம் செய்யப்பட்டது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாநி உடலை தானம் செய்ததற்காக அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் நன்றி தெரிவித்தனர்.