
சிங்கத்தை அதன் கோட்டைக்குள்ளேயே வந்து கவனித்துவிட்டு மன்னிக்கவும் சந்தித்துவிட்டு செல்வது போல் ஜெயலலிதாவின் துடிப்பால் உருவாக்கப்பட்டு, அவர் இறந்துவிட்ட நிலையிலும் அவரது போட்டோவை வைத்து நகர்த்தப்படும் அ.தி.மு.க. அரசை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே வந்து சந்தித்திருக்கிறார் வெங்கய்யா நாயுடு.
பொதுவாக மாநில அமைச்சர்களோடு மத்திய அமைச்சர் இணைந்து நடத்தும் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்கள் ஏதாவது ஒரு அரசு அலுவலகங்களில்தான் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் ஜெ., எனும் பேராளுமை இல்லாத நிலையில், பா.ஜ.க.வின் வழிகாட்டுதல் படிதான் எடப்பாடி அரசு நடக்கிறது எனும் விமர்சனம் வெளிப்படையாக வைக்கப்படும் நிலையில் வெங்கய்யாவின் இந்த கோட்டை விசிட் கொத்துக் கொத்தான கேள்விகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
ஆனால் கோட்டைக்குள் தான் கால் வைத்தது பற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக்கு டென்ஷனாகி வெங்கய்யா நாயுடு கொடுக்கும் பதிலடிகளை அப்படியே நம்புவோமாக...
1. ஜெயலலிதாவின் மறைவு, ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் தொடக்க நிலையில் பிரச்னைகள் இருந்தது. ஆனால் தற்போது தமிழக அரசின் செயல்பாடுகள், திட்ட நடைமுறைகள் ஆகியன மத்திய அரசை ஈர்த்து உள்ளன.
2. அதே நேரம் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து சான்றிதழ் கொடுக்க நான் சென்னை வரவில்லை. அது என் வேலையுமில்லை.
3. யார் மீது குற்றம் கண்டுபிடிக்கவும் வரவில்லை. அது எனது இயல்புமில்லை.
4. மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த துரிதப்படுத்தவே வந்தேன்.
5. பா.ஜ.க.வின் கைப்பாவையாக அ.தி.மு.க. இருக்கிறது என்று தி.மு.க. கூறும் குற்றச்சாட்டு தரம் தாழ்ந்த அரசியல்.
6. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது.
-_ வெங்கய்யா நாயுடுவின் மேற்படி வார்த்தைகளை அப்படியே நம்புங்கள் தமிழர்களே. யாராவது அடிச்சு சொன்னாலும் கூட அல்லது மிதிச்சோ, கடிச்சோ சொன்னாலும் கூட இதெல்லாம் பொய்யின்னு நினைச்சிடாதீங்க. அப்புறம் சாமி குத்தமாகிடும்.