
தமிழகத்தில் நிலையான ஆட்சி நடக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்று அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெங்கையாநாயுடு இன்று சென்னை வந்தார். கிண்டியில் தங்கியிருக்கும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நிலையான ஆட்சி நடக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்று தெரிவித்த அவர், அதிமுகவின் உள்கட்சிப் பிரச்சனையில் பா.ஜ.க. தலையிடாது என்று உறுதிபடக் கூறினார்.
மோடியின் பினாமி ஆட்சியே தமிழகத்தில் நடப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வெங்கையாநாயுடு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் திமுக பினாமி ஆட்சியை நடத்தியதா? என்று கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் போராட்டம் குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளின் கடன்களை மாநில அரசு தான் தள்ளுபடி செய்ததாகவும், இதற்கு மத்திய அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறினார்.