மைதானத்துக்கு பேனர் தானே எடுத்துகிட்டு போகக்கூடாது.. பாம்பை கொண்டு போகலாம்ல!! பகீர் கிளப்பும் வேல்முருகன்

First Published Apr 10, 2018, 10:01 AM IST
Highlights
velmurugan very strong stand against ipl in chennai


சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாம்பை எடுத்துக்கொண்டு செல்ல தடை விதிக்கப்படவில்லை. பாம்புகளை மைதானத்துக்குள் சிலர் விட உள்ளதாக தகவல்கள் உள்ளன என கூறி பகீர் கிளப்பியுள்ளார் வேல்முருகன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள் என பல தரப்பினரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்துவருகிறது.

தமிழர்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக போராடி கொண்டிருக்கும் வேளையில், ஐபிஎல் கொண்டாட்டம் கூடாது. சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என்ற குரல் வலுத்துவருகிறது. அப்படி போட்டி நடத்தப்பட்டால், ஒட்டுமொத்த தமிழர்களும் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சென்னை வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீமான், திரைத்துறையினர், சில அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் என பல தரப்பினரும் ஐபிஎல்லை புறக்கணிக்க வலியுறுத்திவருகின்றனர். மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானம் முற்றுகை, மைதானத்துக்குள் போராட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளதாகவும் கூறினர்.

இதையடுத்து மைதானத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கண்டிப்பாக திட்டமிட்டபடி போட்டி நடந்தே தீரும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

மேலும், கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்கள், பை, செல்போன், லேப்டாப், பேனர், கறுப்பு துணி, தண்ணீர் பாட்டில்கள், உணவுகள், குளிர்பானங்கள், இசைக்கருவிகள் என எதுவும் எடுத்து செல்ல கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகள் குறித்து பேசிய வேல்முருகன், பேனர்கள் தானே எடுத்து செல்லக்கூடாது? பாம்புகளை எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. சிலர் பாம்புகளை எடுத்து சென்று மைதானத்துக்குள் விட உள்ளதாக தகவல்கள் தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் மைதானத்துக்குள் பாம்புகளை விடுவார்கள். அப்போது எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை பார்ப்போம் என வேல்முருகன் பகீர் கிளப்பியுள்ளார்.
 

click me!