
ஒரு காலத்தில் பா.ம.க. ராமதாஸின் வலது மற்றும் இடது கரங்களாகவே இருந்தவர் வேல்முருகன். பின் அவரோடு ஏற்பட்ட பஞ்சாயத்தால் வெளியேறி தமிழக வாழ்வுரிமை கட்சி எனும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தியபடி அவ்வப்போது சவுண்டு விடுவார்.
வேல்முருகன் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் கவனம் ஈர்க்கிறது.
அதாவது தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் யாருக்கு சொந்தம் எனும் பிரச்னை தேர்தல் கமிஷனிடம் வழக்கில் இருக்கும் நிலையில் “தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அரசியல் கட்சி எது? அந்தக் கட்சியின் பெயர் என்னவென்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவுமில்லை. இது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குற்றச்செயல் மட்டுமல்ல, வெளிப்படைத்தன்மையற்ற ஜனநாயக விரோத நடவடிக்கையுமாகும். எனவே தமிழகத்தை ஆளும் கட்சி எது? என்பதை கவர்னர் தெளிவு படுத்த வேண்டும்.” என்று கோரியுள்ளார்.
தமிழகத்தை ஆளும் கட்சி எது? என்று வேல்முரு தங்களை சீண்டியதை கூட எடப்பாடி - பன்னீர் அண்ட்கோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த பிரச்னைக்கான பஞ்சாயத்தை கவர்னரிடம் கொண்டு சென்று, அவரிடமே தீர்ப்பை கேட்டிருப்பதுதான் அவர்களை கடுப்பாக்கி இருக்கிறது.
ச்சும்மாவே ஆடுற கவர்னரின் கால்ல இந்தாளு வேற ஜல்லு ஜல்லுன்னு சலங்கையை கட்டி விடுராறே! இது தாங்குமா? என்று புலம்பிக் கொட்டியுள்ளனர்.