5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்...!! வாழ்வாதரம் பறிகொடுத்து தவிக்கும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2020, 10:51 AM IST
Highlights

தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .

தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .  இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தொல்பொருட்கள் முக்கிய இடம் வகிக்கிறது ,  உலக அளவில் தோல் தொழில் வர்த்தகத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.   அதில்  தமிழகம் சிறந்து விளங்குகிறது ,  வேலூர் , ஈரோடு , திண்டுக்கல் , ஆகிய பகுதிகளில் தோல் தொழில் நடந்து வந்தாலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தோல் தொழிலில் முதன்மை பெற்று விளங்குகிறது .  குறிப்பாக வாணியம்பாடி , ஆம்பூர் , பேரணாம்பட்டு , மேல்விஷாரம் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மொத்தம் 300க்கும் அதிகமான தொழிற்சாலைகளும் ,  400க்கும் மேற்பட்ட ஷூ மட்டும் கையுறை தொழிற்சாலைகளும் உள்ளன .  இந்த தொழிற்சாலைகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் . 

 

குறிப்பாக பெரிய கல்வியறிவு இல்லாத பெண்களுக்கும் கூட வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களாக ஷூ பேக்டரிகள் உள்ளன ,  தொழிற்சாலைகளில் அதிக அளவில் பெண்களே ஆக்கிரமித்துள்ளனர் ,  வேலூர் மாவட்டத்தில் தோல் பொருட்கள் வர்த்தகம் அதிக அளவில் இருப்பதால் ,  ஆம்பூர் நகரத்திற்கு ஏற்றுமதி சிறப்பு நகரம் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது .  ஆம்பூர்  , ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்கா , ஜெர்மனி , பிரான்ஸ் இத்தாலி , ஹாங்காங் , நெதர்லாந்து , பெல்ஜியம் , ஸ்பெயின் , ரஷ்யா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , ஐரோப்பா யூனியன் , உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது . ஏற்றுமதியின் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி கிடைக்கிறது .  இந்த தோல் வர்த்தகத்தை பொறுத்த மட்டும் கடந்த 2014 - 15 ஆம் ஆண்டில் 6.45 பில்லியன் அமெரிக்க டாலரும்,  2015 -16 , 5 . 83 பில்லியன் அமெரிக்க டாலரும்,  2016 -17 இல் 5.66 மில்லியன் அமெரிக்க டாலர் என ஒவ்வொரு ஆண்டு வர்த்தகம் குறைந்துகொண்டே வருகிறது . 

 

இந்நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக உள்ளது இந்த தோல் தொழில்   கொரோனா காரணமாக தோல் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது . தொடர் லாக்டவுன் காரணமாக இதுவரை  இந்திய ரூபாய் மதிப்பில் 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் திரும்பப்பெற  பட்டுள்ளதால் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னரும் இத்தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .  தற்போது இந்த தொழிலில் ஏற்றுமதிக்கான ஆர்டர் இல்லாததால் தொழில் முடங்கும் நிலை உள்ளது.   இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்காமல் இருப்பதால் எந்திரங்களும் பழுதாகி இருக்கும் எனவும் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னரும் எந்திரங்களை பழுது பார்த்த பின்னரே தொழிற்சாலைகளை இயக்க முடியும் எனவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் . இதனால் வேலூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர் .  மீண்டும் அரசு உதவினால் மட்டுமே தொழிற்சாலைகள் நடத்த முடியும் என்றும் தோல் ஏற்றுமதி மற்றும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் . 

 

 

click me!