ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்திடும் பேரபாயம்! ஷாக் கொடுத்த வீரமணி

By sathish kFirst Published Jun 15, 2019, 10:15 AM IST
Highlights

மத்திய அரசு மட்டுமல்லாமல், பொதுத் துறையிலும், அனைத்து உயர் பதவிகளிலும், தனியார் துறைகளிலிருந்து ஆட்களை நியமிக்கிறோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்திடும் பேரபாயம் உள்ளது என கி.வீரமணி கூறியுள்ளார்.

மத்திய அரசு மட்டுமல்லாமல், பொதுத் துறையிலும், அனைத்து உயர் பதவிகளிலும், தனியார் துறைகளிலிருந்து ஆட்களை நியமிக்கிறோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்திடும் பேரபாயம் உள்ளது என கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள, மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிகளுக்கு கீழே உள்ள துணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் ஆகிய பதவிகளுக்கு 400 பேரை நேரடி நியமனம் செய்திட மோடி அரசு முனைந்துள்ளது. இதில் இட ஒதுக்கீடு உண்டா என்பது பற்றி எந்த செய்தியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிர்வாகத்தில் உயர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல், நேரடி நியமனம் மூலம் பணியமர்த்துவது சமூகநீதிக்கெதிரான செயல் என்பதும் மட்டுமல்ல. அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானதும் கூட என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

“தேர்வு மூலம் குரூப் ஏ பதவிகளில் தொடக்க நிலை பணியில் சேர்ந்து பதவி உயர்வு மூலம் துணைச் செயலாளர் / இயக்குநர், பின்னர் இணைச் செயலாளர், செயலாளர் என்ற பதவிகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பை மறுப்பது போல் ஆகும்” என்றவர், நேரடி நியமனம் மூலம் தனியார் துறையிலிருந்து 45 வயதுள்ளவர்களை, தகுதி அனுபவம் என்ற அடிப்படையில் நியமனம் செய்கிறோம் என்பது ஏற்கெனவே, பல ஆண்டுகள் ஒவ்வொரு நிலையிலும் பணியில் உள்ள அதிகாரிகளின் அனுபவத்தைக் கேலி செய்வதாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “இந்த நேரடி நியமனங்கள் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ளவர்களையே மத்திய அரசின் தலைமை பொறுப்புகளில் நிரப்பிடும் தந்திரமேயாகும். நாளை ஆட்சி மாறினாலும், இந்த உயர் பதவிகளில் ஆர்.எஸ்.எஸ். சிந்தனாவாதிகளின் ஆட்சிதான் நடைபெறும்; அதற்காகத்தான் இந்த தகுதி, அனுபவம் என்ற மோசடி முழக்கம்; அது மனு ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்று விமர்சித்தவர், துணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் நேரடி நியமனம் என்பதில் இட ஒதுக்கீடு குறித்த அரசின் நிலை என்ன என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதில் நாம் அலட்சியம் காட்டினால், மத்திய அரசு மட்டுமல்லாமல், பொதுத் துறையிலும், அனைத்து உயர் பதவிகளிலும், தனியார் துறைகளிலிருந்து ஆட்களை நியமிக்கிறோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமனம் செய்திடும் பேரபாயம் உள்ளது. இதுதொடர்பாக அனைத்து சமூகநீதி அமைப்புகளும், இது தொடர்பாக மக்கள் மன்றத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நில்லாமல், நீதிமன்றத்திலும் சமூகநீதி பெற வாதாட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

click me!