வீரமணி சென்ற காரை கல்லால் பதம் பார்த்த இந்து முன்னணியினர் !! திருப்பூரில் துரத்தியடிப்பு !!

By Selvanayagam PFirst Published Apr 9, 2019, 11:26 AM IST
Highlights

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை கடந்த வாரம் திருச்சியில் ஓட ஓட விரட்டிய நிலையில், திருப்பூரில் இந்து முன்னணியினர் அவர் சென்ற கார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற  கூட்டம் ஒன்றில் பேசிய கி.வீரமணி பொள்ளாச்சி சம்பவத்தின் முன்னோடி கிருஷ்ணர்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வீரமணிக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டன. 

மேலும் கடந்த  4 ஆம் தேதி திருச்சியில் கி.வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தி.கவினர் மீது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கற்களையும் செருப்பையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதற்கு ஸ்டாலின், திருமாவளவன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து கல்லாங்காடு என்ற இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கி.வீரமணியை ஒரு காரில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் செல்வராஜ் அழைத்து சென்றார். அந்தக் கார் பொதுக் கூட்ட இடம் அருகே வந்தபோது சிலர் வீரமணிக்கு எதிராக திடீரென்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது கி.வீரமணி வந்த கார் மீது கல் வீசப்பட்டது. இதனால் காரின் முன் கண்ணாடி உடைந்தது. இதில் வீரமணி அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றித் தப்பினார்.

தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வீரமணி கார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள். இரு தரப்பினரும் மோதலுக்குத் தயாராக, போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் கூட்டம் நடைபெற்றது.

click me!