சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னீங்க.. அதை சரி செய்ய வேண்டாமா..? ரஜினி முடிவு குறித்து திருமா சுளீர்!

By Asianet TamilFirst Published Mar 12, 2020, 9:55 PM IST
Highlights

“தான் கட்சி தொடங்கப்போவதில்லை. அரசியலுக்கு வரப்போவதும் இல்லை என்பதையே இன்றைய பேட்டியின் மூலம் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார். எல்லாவற்றையும் சரிசெய்த பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்றால், எவராலும் அரசியலுக்கு வர முடியாது."

சிஸ்டம் சரியில்லை எனக் கூறுபவர் அதை சரி செய்ய முன்வர வேண்டும் என்று நடிகர் ரஜினியை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் தன்னுடைய முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தினார். தான் முதல்வராக விரும்பவில்லை என்றும் கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனர்.

 
ரஜினி அளித்த இந்தப் பேட்டி குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் கூறுகையில், “தான் கட்சி தொடங்கப்போவதில்லை. அரசியலுக்கு வரப்போவதும் இல்லை என்பதையே இன்றைய பேட்டியின் மூலம் ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார். எல்லாவற்றையும் சரிசெய்த பின்னர் அரசியலுக்கு வர வேண்டும் என்றால், எவராலும் அரசியலுக்கு வர முடியாது. சிஸ்டம் சரியில்லை எனக் கூறுபவர் அதை சரி செய்ய முன்வர வேண்டும். மற்றவர்கள் சரி செய்வார்கள் என எதிர்பார்க்கக்கூடாது” என திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும் திருமாவளவன் தொடர்ந்து கூறுகையில், “எஸ்.சி. மக்களின் வாக்குகளைக் கவர பாஜக எல்.முருகனை தமிழக  தலைவராக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பாஜகவில் எஸ்.சி. இனத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இருக்கிறார்கள். எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவரை பாஜக தலைவராக்கினாலும் அதன் சனாதன முகம் என்றுமே மாறப்போவதில்லை. முருகன் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு வாழ்த்துக்கள்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!