ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்... மோடி அரசுடன் மோத எடப்பாடி அரசுக்கு ஐடியா கொடுக்கும் திருமாவளவன்..!

By Asianet TamilFirst Published Nov 6, 2020, 9:23 AM IST
Highlights

ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை அகில இந்திய தொகுப்புக்கான 15 சதவீத இடங்களை நாங்கள் தரப்போவதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு 7.5% வழங்க அரசு ஆணை பிறப்பித்தது போல; வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முடிவெடுத்தது போல; 7 தமிழர் விடுதலையிலும், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்திலும் தமிழக அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஆளுநர் முடிவெடுக்கும் வரை காத்திருக்காமல் அந்த ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஏழு பேரையும் உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், முன்னேறிய சமூகப் பிரிவினருக்கு (EWS) 10 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எட்டே நாட்களில் இயற்றிய பாஜக அரசு, மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு எடுக்கவில்லை என ஆறு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான ஓபிசி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர். 
எனவே, மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை அகில இந்திய தொகுப்புக்கான 15 % இடங்களை நாங்கள் தரப்போவதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதன் மூலம் ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50% இட ஒதுக்கீடு கிடைத்துவிடும். தமிழக ஓபிசி மாணவர்களின் எதிர்காலம் கருதி தயக்கமின்றி இந்த முடிவை எடுக்குமாறு தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

click me!