விரும்பும் எல்லோருக்கும் தபால் ஓட்டு அளிக்கும் வசதி வேண்டும்... தேர்தல் ஆணையத்திடம் விரும்பி கேட்கும் திருமா!

By Asianet TamilFirst Published Jul 14, 2020, 8:37 PM IST
Highlights

"கொரொனா பாதிப்புக்கு ஆளானவர்களில் இளம் வயதுடையவர்களே அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எனவே,இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்  மட்டும் விரும்பினால் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கலாம் என்று சலுகை அளிப்பதில் எந்தத் தர்க்கமும் நியாமும் இல்லை. கொரோனா தொற்றும்  தொற்றுக் குறித்த அச்சமும் அனைத்து வயதினருக்கும் உள்ளதால்,  தபால்மூலம் வாக்களிக்கும் வசதியை வாக்குரிமையுள்ள அனைவருக்குமே அளிக்க வேண்டும்."

விரும்பிய அனைவருக்கும் தேர்தலில் தபால் வாக்கு அளிக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப சட்ட அமைச்சகமும் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் இந்த வசதி செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமின்றி விரும்பிய அனைவருக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த வேண்டும், அதற்கு ஏற்ப தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது. 
கொரொனா பாதிப்புக்கு ஆளானவர்களில் இளம் வயதுடையவர்களே அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. எனவே,இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்  மட்டும் விரும்பினால் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கலாம் என்று சலுகை அளிப்பதில் எந்தத் தர்க்கமும் நியாமும் இல்லை. கொரோனா தொற்றும்  தொற்றுக் குறித்த அச்சமும் அனைத்து வயதினருக்கும் உள்ளதால்,  தபால்மூலம் வாக்களிக்கும் வசதியை வாக்குரிமையுள்ள அனைவருக்குமே அளிக்க வேண்டும். எவரொருவர் விரும்பினாலும் தனது வாக்கை தபால்வாக்கு மூலமாக அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். 


அவ்வாறு அதனை விரிவுபடுத்தும் நிலையில், தபால் வாக்குச் சீட்டில் யாரிடம் உரிய சான்று பெறுவது என்பது உள்ளிட்ட விளக்கங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.  அப்படிச் செய்யும்போது அவர் வாக்களிக்கும் ரகசியம் காப்பாற்றப்படுவதற்கான பாதுகாப்புகளையும் உறுதிபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தபால் வாக்கு  வசதி அளிக்கப்படுவது தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.எனவே, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்துவதே முறையானதாகும்.

 
பீகார் தேர்தல் நெருங்கிவிட்டதால் நோய்த்தொற்றுப் பரவாதவாறு எவ்வாறு  தேர்தல் பிரச்சாரம் செய்வது என்பது குறித்தும் தெளிவான வழிகாட்டுதல்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடவேண்டும்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

click me!