விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் யூசுப் மாரடைப்பால் மரணம்.. தலையில் அடித்து கதறும் திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published May 15, 2021, 10:18 AM IST
Highlights

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப்புக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகம் முழுவதும் கொரோனாஇரண்டாவது அலை தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. முதல் அலையில் இருந்து தப்பி, நாடு இப்போது இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டுள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆட்பட்டு கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் காக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முன் களப்பணியாளர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகி வரும் கொடூரம் தொடர்கிறது. 

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப்புக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. பாரிமுனையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றிரவு திடீரென உயிரிழந்தார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முகமது யூசுப் மரணத்தை ஏற்க மனம் மறுக்கிறது, என்னை குடும்பத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டவர்.

என் மீது மாசிலா அன்பைப் பொழிந்தவர். மீண்டும் வருவார் என நம்பியிருந்தேன், மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு என தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது இரங்கல் செய்தியில் கண்ணியம் மிகுந்த தோழமைக்கு அடையாளமாய் கடைசி மூச்சு வரையில் வாழ்ந்து காட்டி அருமைச் சகோதரர் முகமது யூசுப்பின் மறைவு, தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்தையே அழித்து ஒழிக்கும் கொலைவெறி தாக்கம் எப்போது தனியும் எனவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 

click me!