பொங்கியதால் பொங்கல் கொண்டாடச் சொல்லி பல்டி..!! கடைசி நேரத்தில் கரும்பு தின்ன கூப்பிட்ட திருமா...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2020, 11:54 AM IST
Highlights

பொங்கலையொட்டி வாசலில் கோலமிடும்போதும் “வேண்டாம் சிஏஏ, வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் என்பிஆர்” என பதிவு செய்யவேண்டும். 

தமிழினத்தின் பெருமைமிகு தனிப்பெரும் திருவிழாவாம் பொங்கல் திருநாளில் உலகத் தமிழ்மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாடே பாஜக அரசின் ஃபாசிச போக்குகளை எதிர்த்துப் போராட்டக் கொந்தளிப்பில் மூழ்கியுள்ள சூழலில், அதன் தீவிரம் தணிந்துவிடக் கூடாது என்னும் நோக்கில்தான் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்தைத்  தவிர்ப்போமென ஏற்கனவே விடுதலைச்சிறுத்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.  அதாவது, கட்சியின் சார்பில் ஆடம்பர -ஆர்ப்பாட்ட விழாக்கள் வேண்டாமென கேட்டுக்கொண்டேன். அதன்படி,  விடுதலைச்சிறுத்தைகள் பொங்கலைக் கொண்டாடவில்லையெனினும், மக்களின் பாரம்பரியமான இந்தப் பண்பாட்டுத் திருவிழாவில் அவர்களோடு இணைந்து கலந்து இயங்குவது இன்றியமையாததாகும். 

மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடாமல் மக்களோடு மக்களாகப் பங்கேற்பது அவசியமாகும்.  அவ்வாறு பங்கேற்பதன்மூலம்தான் பாஜக மற்றும் அதன் சங்பரிவார் அமைப்புகள் பண்பாட்டுத் தளங்களில் திணிக்கும் சனாதன அரசியலை அம்பலப்படுத்த இயலும். வழக்கமாக, பண்பாட்டு விழாக்களைத் தங்களுக்கான களங்களாக மாற்றிக்கொண்டதன் விளைவே இன்று அவர்கள் ஆட்சியதிகார வலிமையைப் பெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது. 
 தமிழர் திருநாளையும் தங்களுக்குரிய பண்டிகையாக,  மதம் சார்ந்த திருநாளாக மாற்றும் நிலையைப் பார்க்கிறோம். 
இது உழவர் பெருங்குடிகளான உழைக்கும் மக்களின் உன்னதமான திருவிழா. ஆனாலும் அதன் பண்பாட்டுக்கூறுகளில் சனாதனத்தைத் திணிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது.  அதாவது பொங்கலை இந்து மதம் சார்ந்த பண்டிகையாகக் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது. 

 இந்தியாவில் மதசார்பற்ற ஒரே திருவிழா தமிழர் திருநாள்தான்.  அத்தகைய புரிதலோடு இவ்விழாவில் மக்களோடு இணைந்து பங்கேற்க வேண்டுகிறேன்.  அத்துடன், பண்பாட்டுத் தளங்களிலும் நமது கருத்தியலைக் கொண்டுசெல்லும் வகையில், பொங்கலையொட்டி வாசலில் கோலமிடும்போதும் “வேண்டாம் சிஏஏ, வேண்டாம் என்ஆர்சி, வேண்டாம் என்பிஆர்” என பதிவு செய்யவேண்டும். தேசத்தைச் சூழ்ந்துள்ள பெருங்கேடு இந்தப் புதிய சட்டங்கள். இதிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வகுத்தளித்த  அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதன் மூலம்தான் நாட்டைக் காப்பாற்ற இயலும். எனவே, பண்பாட்டுக் கொண்டாட்டங்களில் நமது போராட்ட உணர்வுகள் நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்வதும், அதேவேளையில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடாமல் அவர்களோடு இணைந்து இத்தகைய விழாக்களில் பங்கேற்பதும் நமது கடமை என்பதை உணர வேண்டும். 

அதாவது, சனாதனத்தை வேரறுக்கும் போர்க்குணத்தோடு மக்களை அணிதிரட்டுவதும்  மக்களோடு பணியாற்றுவதும் விடுதலைச்சிறுத்தைகளின் சவாலான கடமைகள் என்பதைச் சுட்டிக்காட்டி,  என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளுக்கும் எமது உயரிய தமிழ்மக்கள் யாவருக்கும்  உள்ளம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் . 
 
 

click me!