நம்ப ஒத்துமையை காட்ட வேண்டிய நேரம் இது... முக்கிய முடிவெடுக்கும் படி ஸ்டாலினுக்கு திருமா அழுத்தம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 19, 2021, 5:44 PM IST
Highlights

தமிழ்நாட்டின் ஒற்றுமையைக் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் உடனே கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். மறுபுறத்திலோ தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால், இனி, மத்திய அரசு அனுமதி கொடுத்ததும், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம்’ கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவை தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்து  வருகின்றன. மேகதாது அணை விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேகதட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் தமிழ்நாட்டின் ஒற்றுமையைக் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் உடனே கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

 இந்திய ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் அணை கட்டுவோம்' என்று கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேகதட்டு பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு அவர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

கடந்த மாதத்தில் நாளேடுகளில் இதுதொடர்பான செய்தி வெளியானபோது உடனடியாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தானே முன்வந்து இதை வழக்காக எடுத்து மேகதட்டுவில் அணை கட்டும் நடவடிக்கைகள் நடக்கிறதா ? என்பதைக் கண்டறியுமாறு குழு ஒன்றை அமைத்தது. 'அந்தக் குழுவை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்' என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆணவமாக அறிவித்தார். இப்போது அந்தக் குழுவை பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கலைப்பதாக அறிவித்துள்ளது. மேகதட்டுவில் அணைக்கட்டும் விசயத்தில் கர்நாடகா அரசையே ஒன்றிய பாஜக அரசும் ஆதரிக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

காவிரி சிக்கலில் கர்நாடகம் கையாண்டுவரும் அணுகுமுறையை நாம் கவனிக்க வேண்டும். நடுவர் மன்றத்திலும் சரி, உச்சநீதிமன்றத்திலும் சரி கர்நாடக அரசு தனது சார்பில் வாதாடுவதற்குத் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்திருந்தது. அவர்களோடு கர்நாடக மாநில முதலமைச்சர்கள் அவ்வப்போது கலந்து ஆலோசனை நடத்தி வழக்கைத் தீவிரமாக நடத்தினார்கள். வழக்கு விசாரணை நடந்தபோதெல்லாம் கர்நாடகாவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மட்டுமின்றி மூத்த அமைச்சர்களும் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று வழக்கை கவனித்தனர். அத்துடன் காவிரிப் பிரச்சனை தொடர்பாக கன்னட இனவெறி அமைப்புகள் விரும்பியபடியெல்லாம் போராட்டம் நடத்த அந்த மாநில அரசு ஆதரவாக இருந்தது. அதை ஊக்குவிக்கவும் செய்தது. 

அங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக வீதியில் இறங்கிப் போராடவும் செய்தன. கர்நாடகாவைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக இங்கே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. அதனால் காவிரி பிரச்சனை என்பது ஏதோ டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சனை மட்டும்தான் என்ற மனநிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதை தமிழ்நாட்டின் உயிர்நாடியான- உரிமை பிரச்சனையாக, மாற்றவேண்டிய கடமை இப்போதுள்ள திமுக அரசுக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழ்நாட்டுக்கு உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், மேகதட்டுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை விசிக சார்பில் வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். 
 

click me!