
கலசப்பாக்கம் எம்.எல்.ஏவைத் தாக்கிய வசந்தமணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த வசந்தமணி, மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை தாக்கியதற்காக கடந்த மாதம் 22ம் தேதி வசந்தமணி கைது செய்யப்பட்டார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக மேடை அலங்காரம் செய்த வசந்தமணிக்கு பேசிய தொகையை தராததால், இருவருக்கும் இடையே ஏற்கனவே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் அதன் எதிர்வினையாகவே, கடந்த மாதம் 21ம் தேதி போளூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை வசந்தமணி தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தை தாக்கியதற்காக கைது செய்யப்பட்ட வசந்தமணி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வசந்தமணி நேற்றைய முன் தினம் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிறையில் வசந்தமணிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் வசந்தமணியின் தலையில் ரத்தம் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 26-ம் தேதி வசந்தமணிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த வசந்தமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக, பாகாயம் காவல் நிலையத்தில் சிறை அலுவலர் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து வேலூர் விரைவு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் விசாரணை நடத்தவுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பணம் கேட்க சென்ற தனது கணவரை, எம்எல்ஏவும் அவரது ஆட்களும் தாக்கியுள்ளதாகவும் இதனால், தான் தனது கணவர் உயிரிழந்தார் என்றும் எம்எல்ஏ உள்ளிட்ட 10 பேர் மீது போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வசந்தமணியின் மனைவி குற்றம்சாட்டுகிறார். எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி வசந்தமணியின் உறவினர்கள் நேற்று போளூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வசந்தமணியின் பிரேத பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.