
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அறிவித்த நிதிகளை ஒதுக்கும்போதுதான் பட்ஜெட் குறித்த விமர்சனங்களை முன்வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையிலான கவர்ச்சியான அறிவிப்புகள் இல்லை. ஆனால், விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, வருமான வரி உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி, இந்த பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்தார்.
கர்நாடக அரசு பட்ஜெட்டை எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், விவசாயம், மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே முதிர்ச்சியற்ற முறையில் விமர்சிப்பது சரியாக இருக்காது. அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதைப் பொறுத்துத்தான் நாம் விமர்சிக்க முடியும் என தெரிவித்தார்.