ராமதாஸை சீண்டும் வன்னிஅரசு.. ட்விட்டரில் வெடிக்கும் நாடகக் காதல் சர்ச்சை..

Published : Dec 16, 2021, 05:38 PM ISTUpdated : Dec 16, 2021, 05:43 PM IST
ராமதாஸை சீண்டும் வன்னிஅரசு.. ட்விட்டரில் வெடிக்கும் நாடகக் காதல் சர்ச்சை..

சுருக்கம்

" இப்போதாவது பெண்கள் தங்களது இணையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கலாமா? அல்லது பெற்றோர் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? மீறினால் சாதி ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்குமா? மருத்துவர்களுக்கே வெளிச்சம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை டேக் செய்து டுவிட் பதிவிட்டுள்ளார். 

பெண்களின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழ்ங்கியுள்ள நிலையில், "இனியாவது பெண்கள் தங்களது இணையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கலாமா? அல்லது பெற்றோர் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? மீறினால் சாதி ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்குமா என்பது மருத்துவர்களின் வெளிச்சம்"  என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை டேக் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு ட்வீட் செய்துள்ளது சமூக வளைதளத்தில் அனலை கிளப்பியுள்ளது.

தமிழக அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர் எதிர் துருவங்களாக இருந்து வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக வடமாவட்டங்களில் இந்த இரண்டு கட்சிகளுமே பலம்வாய்ந்த கட்சிகளாக உள்ளன. துவக்க காலத்தில் பாம்பும் கீரியுமாக இருந்த இந்த காட்சிகள். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற உயர்ந்த இலட்சியத்துடன் இணைந்து செயல்பட தொடங்கின. இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழர் வாழ்வுரிமை என பல்வேறு பிரச்சினைகளில் ராமதாஸும் திருமாவளவனும் இணைந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் இரு தலைவர்களும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் விருது வழங்கி கௌரவித்தது. அதேபோல் குடி தாங்கி என்ற ஊரில் தலித் சடலத்தை பொதுவெளியில் எடுத்துச் செல்ல எதிர்ப்பு எழுந்தபோது ராமதாஸ் நேரடியாகவே இங்கு சென்று அந்த உடலைத் தன் தோளில் சுமந்து சென்றார் என்பதற்காக, அவருக்கு தமிழ் குடிதாங்கி என பட்டம் வழங்கி திருமாவளவன் மகிழ்ந்தார். ஆனால் அந்த நெருக்கம் நீண்ட நாளைக்கு நீடிக்கவில்லை. 

மீண்டும் ராமதாஸ்  பாட்டாளிகளின் வாக்கு வங்கியை ஒன்று திரட்ட தலித் விரோத அரசியலை முன்னெடுத்ததுதான் அதற்கு காரணம்.  இதனால் ஒரு கட்டத்தில் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாமகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அப்போது பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வன்னியப் பெண்களை குறிவைத்து காதலிப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றுகின்றனர் என்றும், கூலிங் கிளாஸ், டி ஷர்ட், ஷூ அணிந்து பணக்கார வன்னியப் பெண்களை மயக்கி, அவர்களுடன் தவறாக நடந்துவிட்டு பின்னர் அவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணத்தை அபகரிக்கின்றனர் என்றும், இந்த நாடக காதலுக்கு பட்டியலின சமுதாயத்தின் தலைவராக இருப்பவர்தான் காரணம் என்றும் ராமதாஸ் பேச தொடர்கினார். அவரின் இந்த திடீர் குற்றச்சாட்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையே தீப்பிழம்பாக வெடித்தது. ராமதாஸ் பற்ற வைத்த தீ தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தலித்துகளை நாடக காதல் கும்பல் என ராமதாஸ் விமர்சித்தார்.

அவர் பயன்படுத்திய வார்த்தை அரசியல் இரு கட்சிக்கும் இடையே மோதலை உருவாக்கியது. தலித்துகளை ஓரங்கட்ட அவர் அனைத்து தலித் அல்லாத அனைத்து சமுதாயத் தலைவர்களையும் ஒன்று திரட்டினார் ராமதாஸ். இதே நேரத்தில் தர்மபுரி திவ்யா இளவரசன் காதல் விவகாரத்தில் தம்பதியான காதலனர்கள் பிரிக்கப்பட்டு, இளவரசன் ரயில் தண்டவாலத்தில் சடலமாக கிடந்தது வரைராமதாசின் முன்னெடுத்த சாதி அரசியலின் விளையாகவே பார்க்கப்படுகிறது. 

பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் கட்சியினர் பல  கட்சித் தலைவர்களை சந்தித்து தங்களுக்கு எத்ராக  ராமதாஸ் செய்யும் வெறுப்பு பிரச்சாரத்துக்கு எதிராக திருமாவளவன் ஆதரவு கோரினார். சாதி வன்மத்துடன் நடந்து கொள்ளும் ராமதாசையும், பாமகவையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என திருமாவளவன் முழங்கினார்.பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இனி இருக்காது என திருமாவளவன் பகிரங்கமாக அறிவித்தார். இது பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகப் பெரும் சறுக்கலாக மாறியது. அன்று முதல் இன்று வரை விடுதலை சிறுத்தைகளும் பாமகவும் நேரெதிர் அரசியலில் பயணித்து வருகின்றன. இன்று வரையிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே பகை நீறுபூத்த நெருப்பாக  இருந்துவருகிறது.

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் விவகாரத்தில் மீண்டும் புகையத் தொடங்கியது. சூர்யா தரப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் களமிறங்கினர், இந்த விவகாரத்திலும் அது பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியது. இதேவேளையில் திமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்று நான்கு இடங்களில் வென்று 4 சட்டமன்ற உறுப்பினர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. ஏறத்தாழ சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும், வட மாவட்டத்தில் வாக்கு வங்கியிலும் இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருந்து வருகின்றன.மொத்தத்தில் தேர்தல் களத்தில் பாமக தொடர் சறுக்கலை சந்தித்து வரும் இந்த சூழலில்தான் விடுதலை சிறுத்தைகள் உடன் இணைந்து செயல்பட பாமக தயாராக இருப்பதாக சமீபத்தில் ராமதாஸ் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அறிவித்திருந்தார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதை பொருட்படுத்தவேயில்லை. பல ஆண்டுகளாக பல நேரங்களில் நேரடி மோதலில் ஈடுபட்டு வந்த இரு கட்சிகளும் தற்போது சமூக வலைதளத்தில் அரசியல் ரீதியாக, கருத்து மோதலில் ஈடுபடும் அளவுக்கு பக்குவமடைந்துள்ளன.

 

இந்த நிலையில்தான் ஆண்களைப் போலவே பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. கடந்த சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி பெண்ணின் திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்துவது குறித்து பேசியிருந்தார். குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து பெண்களை காக்க ,அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசியம் என்றும், நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும் பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது, அரசாங்கம் குழந்தைத் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது, அதில் திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ளார் நிபுணர்களின் பரிந்துரைகளின்படி பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ், பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று நீண்டகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் என அவர் வரவேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு மத்திய அரசின் இந்த  முடிவை மேற்கோள்காட்டி, " இப்போதாவது பெண்கள் தங்களது இணையை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கலாமா? அல்லது பெற்றோர் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? மீறினால் சாதி ஆணவக் கொலைகள் நடக்காமல் இருக்குமா? மருத்துவர்களுக்கே வெளிச்சம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை டேக் செய்து டுவிட் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பெரும் விவார பொருளாக மாறியுள்ளது. இரு கட்சி ஆதரவாளர்களுனம் மாறி மாறி கருத்து மோதலில்ல ஈடுபட்டு வருகின்றனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பேமிலி, பிரெண்ட்ஸ் வாட்ஸ்ஆப் குரூப்களில் கூட விஷம் பரப்பும் மதவாதிகள்.. அலெர்ட் கொடுக்கும் முதல்வர்..
நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு