
முதல்வர் மு.க.ஸ்டாலினை போல உதயநிதியும் சிறப்பாக செயல்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆணையூர், கூடல்நகர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 103 இடங்களில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் திமுகவின் வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் உதயநிதி என்றும் தெரிவித்தார். மேலும் அனைவரும் பாராட்டும் அளவில் செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டிய அமைச்சர் மூர்த்தி, வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வரவேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மதுரைக்காக கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பல வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார் என்று கூறிய அவர், மதுரையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று துவங்கிய சாலை செப்பனிடும் பணிகள் ஒன்றரை மாதத்தில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.