கடைசி நொடி வரை பரபரப்பு..! மூன்றாவது இடத்தில் இருந்து முதலிடம்..! கமலை வானதி வீழ்த்திய கதை..!

By Selva KathirFirst Published May 3, 2021, 12:04 PM IST
Highlights

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெறும் 1379 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருந்த வானதி கடைசி சுற்றில் முதலிடத்திற்கு வந்தது எப்படி தெரியுமா?

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெறும் 1379 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருந்த வானதி கடைசி சுற்றில் முதலிடத்திற்கு வந்தது எப்படி தெரியுமா?

தமிழக அளவில் கவனம் பெற்ற தொகுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கோவை தெற்கு. இதற்கு காரணம் இங்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் பிரபல நடிகருமான கமல் போட்டியிட்டது தான். அத்தோடு பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவியாக உள்ள வானதி சீனிவாசன் கோவை தெற்கில் போட்டியிட்டார். இதனால் இந்த தொகுதி தேசிய அளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கோவை தெற்கில் கமல் உறுதி என்றே கூறியது. மேலும் போட்டியே கமல் – வானதி இடையே தான் என்றும் கூறப்பட்டு வந்தது. ஏறக்குறையா இது உண்மையாகவே இருந்தது. ஆனால் கமல் வெற்றி பெறவில்லை வானதி வென்றுள்ளார்.

Latest Videos

காலை எட்டு மணிக்கு முதல் ரவுண்ட் எண்ண ஆரம்பிக்கப்பட்டு 8.30 மணிக்கு முடிவுகள் வெளியாகின. அப்போது கமல் 2010 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார், 1926 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். வானதிக்கோ வெறும் 1379 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் இந்த தொகுதியில் கமல் – மயூரா இடையே தான் போட்டி என்று கருதப்பட்டது. இரண்டாவது சுற்றிலோ கமலை விட அதிக வாக்குகள் பெற்று மயூரா முன்னிலைக்கு வந்தார். வானதி 2வது சுற்றிலும் தொடர்ந்து 3வது இடத்தில் தான் இருந்தார்.

5வது சுற்றுக்கு பிறகு வானதிக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்க ஆரம்பித்தன. அதுவரை 2வது இடத்தில் இருந்த வானதி எட்டு சுற்றுகள் முடிவில் 2ம் இடத்திற்கு முந்தினார். 10 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு போட்டி கமல் – வானதி என்று ஆனது. காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு வாக்குகள் குறைய ஆரம்பித்தன. ஆனால் 19வது சுற்று முடிவில் திடீர் திருப்பமாக மயூரா ஜெயக்குமார் 35011 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தார். கமல் 36885 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தார். 34849 வாக்குகளுடன் மறுபடியும் வானதி பின்தங்கினார்.

20வது சுற்றில் மறுபடியும் 2வது இடத்திற்கு வந்த வானதி, 23வது சுற்றில் கமலை முந்தினார். இந்த சுற்றில் மட்டும் வானதிக்கு 2481 வாக்குகள் கிடைத்தன. ஆனால் கமலுடக்கு வெறும் 1415 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. சுமார் ஆயிரம் வாக்குகள் கமலை விட வானதிக்கு கூடுதலாக கிடைத்திருந்தது.

அப்போது அவர் பெற்றிருந்த வாக்குகள் 45932 ஆகும். கமல் 45042 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து 24, 25 மற்றும் 26 என மூன்று சுற்றுகளிலும் வானதிக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்து, கமலை வீழ்த்தினார். கடைசியாக வானதி பெற்ற வாக்குகள் 52627, கமல் பெற்ற வாக்குகள் 51,87. இப்படி காலை எட்டு மணிக்கு தொடங்கிய பரபரப்பு இரவு பத்து மணி வரை நீடித்தது. முயலை ஆமை வென்றது, ஆமையை முயல் வென்றது என்கிற கதைகளோடு முயலாமை வெல்லாது என்பார்கள். அதைப்போல் முதல் சுற்றில் 3வது இடத்தில் இருந்தாலும் தொடர்ந்து மன உறுதியுடன் வாக்கு எண்ணும் மையத்திலேயே அமர்ந்து வெற்றி பெற்று இருக்கிறார் வானதி.

click me!