இறப்பிலும் தொட்டுத் தொடரும் நட்பு... எதிரி கட்சிகளையும் உருகவைக்கும் ஒரு உண்மை

By sathish kFirst Published Aug 16, 2018, 9:23 PM IST
Highlights

கலைஞர் கருணாநிதி ! கவிஞர் வாஜ்பாய்! இருவரின் நட்பு    இறப்பிலும் தொட்டுத் தொடரும் தொடருவது அரசியல் தலைவர்களும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாநில சுயாட்சி தத்துவத்தை தன் உடலின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் செதுக்கி வைத்திருந்தவர் கருணாநிதி. ஆத்திகம் போல் அவரது மனதுக்கு ஒவ்வாத மற்றொரு விஷயம் மைய அரசின் அதிகார தொனிகள். அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசை வறுத்தெடுப்பார். 

இந்நிலையில் வாஜ்பாயின் ஆளுமையின் மூலம் பா.ஜ.க. அரசியல் ரீதியில் தலையெடுத்து, நாடாளுமன்றத்தில் அக்கட்சிக்கான எம்.பி.க்கள் கணிசமாக இடம் பிடித்தன. அவர்களில் காவி உடை தரித்த யோகிகள், சாதுக்களும் அதிகமிருந்தனர். 
இதை விமர்சிக்கும் விதமாக ‘இந்திய நாடாளுமன்றம் பண்டாரம் மற்றும் பரதேசிகளின் கூடாரமாகிவிட்டது’ என்று போட்டுப் பொளந்தார் கருணாநிதி. இதற்கு பா.ஜ.க. ரெளத்திர முகம் காட்டியது. 

இப்படித்தான் பிராந்திய அளவில் இயங்கினாலும் தேசிய அளவில் தடம்  பதித்திருந்த கருணாநிதிக்கும், தேசிய அளவிலான கட்சியாய் இருந்தாலும் கூட மாநிலங்களிலும் ஆளுமை காட்டி மத்தியையும் வளைக்க துடித்த  பி.ஜே.பி.க்கும் இடையில் உறவு உருவானது.
பல அழகான காதல்கள் சில நேரங்களில் மோதலில்தான் துவங்கும். வாஜ்பாய் - கருணாநிதி நட்பும் இப்படித்தான் தாங்கள் சார்ந்த கொள்கையின்  முகமாகவே துவங்கியது. 

ஆனால் வாஜ்பாய் எனும் மனிதரின் ஆத்மார்த்த  குணாதிசயங்கள்தான், காவியை மிக கடுமையாக எதிர்த்த கருணாநிதியை பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்கும் சூழலை உருவாக்கின. எந்த நாடாளுமன்றத்தை பரதேசிகளின் கூடாரம் என்று கருணாநிதி விமர்சித்தாரோ அங்கே அதே பி.ஜே.பி.யின் கூட்டணியில் தன் எம்.பி.க்களை கொண்டு போய்  அமர வைத்தார். 

பிறகு கொள்கை ரீதியாகவும், அரசியல் சூழல் ரீதியாகவும் தி.மு.க மற்றும் பி.ஜே.பி. இரண்டும் பிளவு கொண்டன. ஆனாலும் கருணாநிதி மற்றும் வாஜ்பாய் இடையிலான நட்பு தொடர்ந்தது. இந்த இரண்டு ஆளுமைகளையும் இயக்கியது இலக்கியம்தான், இணைத்ததும் இலக்கியமே. 

கருணாநிதியின் இலக்கிய ஆளுமை உலகம் அறிந்தது. அதேபோல் வாஜ்பாய் மிக சிறந்த கவிஞர். மிக அநாயசமாக கவிதை படிப்பார்! அவரது கவிதை வரிகளில் அழகுணர்ச்சி  பொங்கி வழியும். 


அரசியல் கொள்கைகளை தாண்டி நண்பர்களான கருணாநிதி மற்றும் வாஜ்பாய் இருவரும் கவிஞர்கள், கலைஞர்கள் என்கிற ஒற்றுமை மட்டுமில்லை, இருவரும் கடந்த சில காலங்களாக  இயங்கா நிலையில் படுக்கையில் இருந்தனர். மெளனித்த அவர்களின் கண்கள் மற்றும் வாய்க்கு எதிராகவே அவர்களால் கட்டி எழுப்பிய இயக்கங்கள் விறுவிறு அரசியல் செய்தன. அதில் பி.ஜே.பி. வென்றது, தி.மு.க. அதிகாரத்துக்கு வர மூச்சு திணற திணற முயல்கிறது. 

இப்படி ஒரே மாதிரியான  பொருத்தங்களை பெற்றிருந்த வாஜ்பாய் மற்றும் கருணாநிதி இருவரும் ஒருவரை ஒருவர் மரணத்திலும் தொடர்ந்திருப்பதுதான் ஆத்மார்த்த நட்பின் அடையாளம்! 
ஒரு வார இடைவெளியில்தான் இருவரது மரணமும் நிகழ்ந்திருக்கிறது. ஒரு வாரம் முன்னதாக காலமான கருணாநிதியின் வயது 94, இந்த வாரம் காலமான வாஜ்பாயியின் வயது 93! 

கருணாநிதியை தொட்டுத் தொடர்ந்த வாஜ்பாயியின் நட்பு ஆழமானதுதான்!

click me!