
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கட்டுரையை தினமணி நாளிதழில் பிரசுரித்ததற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற நாளிதழின் ஆசிரியர், சடகோப ராமானுஜ ஜீயரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தினமணி நாளிதழ் சார்பில், ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட இலக்கிய விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, அவர் எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையை படித்தார். அந்த கட்டுரை மறுநாள் அந்த நாளிதழிலும் இடம்பெற்றது.
அந்த கட்டுரையில் வெளிநாட்டு ஆய்வாளரின் கருத்தை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்புகளும் வைணவர்களும் வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினர். வைரமுத்துவும் நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதனும் ஆண்டாள் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்த போதிலும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை மிகழும் இழிவாகவும் கொச்சையாகவும் வசைபாடினார். பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரனோ, வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசு அறிவித்தார். இதனால் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஜீயர், உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டாலும் பிப்ரவரி 3ம் தேதி வரை கெடு விதித்திருந்தார்.
இந்நிலையில், நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதன், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று ஜீயரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பேசிய ஜீயர், மனம்வருந்தி வைத்தியநாதன் மன்னிப்பு கோரியதாக தெரிவித்தார். அதேபோல், வைரமுத்துவும் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.