
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்து வழிநடத்திச் செல்வார் என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
அரசியலை விட்டு விலக வைகோ முடிவு; முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை! என்ற தலைப்பில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டிருந்தது, அதில் பொது செயலாளர் வைகோ மதிமுகவை பெரியார் வழியில் சமூக இயக்கமாக நடத்த திட்டமிட்டுள்ளார் என்பதே அச் செய்தியின் சாரம்சமாக இருந்தது.
இணையத்தில் இச்செய்தியை பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே மதிமுகவின் தொழில்நுட்பப் பிரிவினர் நம்மை தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்தனர்.
அதில் “பொதுச்செயலாளர் வைகோவின் புகழுக்கும் பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகவல் பரப்பப்படுவதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்தனர்.
மேலும் சிறையில் இருந்தாலும் வைகோ கொம்பு சீவிய காளையாகவே இருப்பதாகவும், சிறைவாசம் முடிந்து அரசியல் களம் காணும் போது அவரது அறச்சீற்றத்தை காண்பீர்கள் என்றும் கூறி விளக்கம் அளித்தனர்.
சிறைவாசம் முடிந்து கட்சிப் பணிகளை சிறப்பாக ஆற்றிட வைகோவிற்கு “NEWSFAST” வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.