தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறை... உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல் முறையீடு!

By Asianet TamilFirst Published Jul 13, 2019, 8:39 AM IST
Highlights

தேச துரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, வைகோ ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
 

தேசத் துரோக வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேல்முறையீடு செய்திருக்கிறார்.
கடந்த 2009-ல் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசிய வைகோவுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை  தண்டனையையும் ரூ.10 ஆயிரத்தை அபராதமாகவும் விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட்டது.

ஓராண்டு மட்டுமே தண்டனை வழங்கியதால் வைகோ மாநிலங்களவை உறுப்பினராவதில் இருந்த சிக்கல் நீங்கியது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வைகோ, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டார். தேச துரோக வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, வைகோ ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தேச துரோக வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறையை எதித்து வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், “தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சட்ட விரோதமானது. சட்டப்படி தீர்ப்பை வழங்காமல், சிறப்பு நீதிமன்றம் தனக்கு தெரிந்த விஷயங்களை மட்டும் வைத்து எனக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் எனக்கு எதிராக ஆதாரம், சாட்சி எதுவும் இல்லாத நிலையில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. எனவே இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.
 வைகோவின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!