பட்டாசுத் தொழிலைக் காக்க வேறுபாடுகளை கடந்து மத்திய அமைச்சர்களை சந்தித்த வைகோ… இவரு மாதிரி நல்ல மனசு யாருக்கு வரும் !!

By Selvanayagam PFirst Published Feb 9, 2019, 8:38 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் என பிஸியாக உள்ள நிலையில், பட்டாசுத் தொழிலளர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு இதற்காக டெல்லியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து செயல்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.
 

பட்டாசுத் தொழிலுக்கு பெயர் பெற்ற சிவகாசி தற்போது ஒரு ஏழை நகரமாக மாறி வருகிறது. சீனப்பட்டாசு வருகையால் அந்தத் தொழில் பெருமளவு நலிவடைந்து வரும் நிலையில் தற்போது பட்டாசு தயாரிக்க உச்சநீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளால் அந்தத் தொழில் முற்றிலும் அழிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக சிவகாசியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். ஆனால் இது குறித்து மாநில அரசோ அல்லது அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
இந்நிலையில்தான் பட்டாசு ஆலை பிரதிநிதிகளுடன் டெல்லி சென்ற வைகோ, அங்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஹர்ஷவர்த்தன், சுரேஷ் பிரபு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரிகளை சந்தித்து பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகாசி நகரத்திலும், அதைச் சுற்றிலும் உள்ள 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டு 8 லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் எதிர்கால வாழ்வே சூன்யமாகிவிட்டது.

பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாத நிலையை நிபந்தனைகள் மூலம் சுப்ரீம் கோர்ட்டு ஏற்படுத்திவிட்டது. எனவே இதுகுறித்து பிப்ரவரி 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நானும், இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வெங்கடேசும், தற்போதைய இணைச் செயலாளர் ராஜப்பனும் சென்று சந்தித்தோம்.

ஏற்கனவே பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்து நிலைமையை எடுத்து விளக்கி இருக்கிறார். 

அதேபோல பிரதிநிதிகளை பிரதம அமைச்சக அதிகாரிகளிடமும் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதனால் தான் நான் அவரை சந்தித்தேன்.

சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை செல்போனில் தொடர்புகொண்டு, வைகோ உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்று கூறினார். அதன்படி நான் பட்டாசு தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதற்குத் தேவையான கோரிக்கையைச் சுட்டிக்காட்டியும் கோரிக்கை மனு தயாரித்து மந்திரி ஹர்ஷவர்த்தனை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தேன்.

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள பட்டாசு தொழில் வழக்கு வருகிற மார்ச் 1-ந் தேதி விசாரணைக்கு வருவதால், மத்திய அரசு தரப்பிலிருந்து உச்சநீதிமன்ற நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு உரிய வேண்டுகோளோடு மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.

நிபந்தனைகளை முழுமையாக நீக்க முடியாவிடினும், உண்மை நிலைமையை எடுத்து விளக்கி மத்திய அரசு பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகுந்த கனிவுடன் கேட்டுக்கொண்டதோடு, அமைச்சர்  ஹர்ஷவர்த்தன் என்னை மிகவும் அன்பாக நடத்தினார்கள். மத்திய வர்த்தக தொழில்துறை மந்திரி சுரேஷ் பிரபுவையும் நான் சந்தித்து பட்டாசு தொழிலைப் பாதுகாப்பதற்குத் தேவையான கோரிக்கை மனுவைக் கொடுத்தேன். அவரும் ஆவன செய்வதாக உறுதி அளித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தங்களது சுய நோக்கங்களுக்காக மட்டுமே அமைச்சர்கள், அதிகாரிகளை சந்திக்கும் அரசியல்வாதிகள் மத்தியல் இப்படி ஒருவர் இருக்கிறார் என பொது மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 

click me!