
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருதுகணேஷ் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தெரிவித்தார். அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் திமுகவை ஆதரிப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை கடுமையாக விமர்சித்த வைகோ, இம்முறை திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான விளக்கத்தையும் நேற்று வைகோ அளித்தார். ஜனநாயகத்தையும் திராவிட கட்சியையும் தமிழகத்தையும் இந்துத்துவா சக்திகளிடமிருந்து காப்பதற்காகவே திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்ததற்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், வைகோவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்ததற்கு, மதிமுக பொதுச்செயலாளை வைகோவை தாயகத்தில் சந்தித்து மருது கணேஷ் நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணை தூவி சிலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றாலும் வெற்றி திமுகவிற்கே என்பது உறுதியாகிவிட்டது. ஆளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் மனதில் மூண்டுள்ள தீயை அவ்வளவு எளிதாக அணைத்துவிட முடியாது. அதுவே திமுகவிற்கு வெற்றியைத் தேடித்தரும்.
திமுகவை வெற்றி பெறச்செய்யவே அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளோம். எனவே திமுக தொண்டர்களோடு இணைந்து மதிமுக தொண்டர்களும் களப்பணி ஆற்றுவார்கள். திமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி தான் வெற்றிபெறும். அதற்கான நுழைவுவாயில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என வைகோ தெரிவித்தார்.