Actor Vadivelu: அரசியலால் சினிமாவை தொலைத்த வடிவேலு.. மீண்டும் அரசியல் ரீ என்டரி..?? ஸ்டாலினை புகழ்ந்து அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 3, 2022, 11:33 AM IST
Highlights

 உதயநிதி ஸ்டாலினும் போன் செய்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் போன் செய்வார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, தமிழக மக்களுக்கு மிக அருமையான முதல்வர் கிடைத்துள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்த மன தைரியத்தில்தான் தான் விரைவில் குணமடைந்ததாக வைகைப்புயல் வடிவேலு தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் அவர் மனமுவந்து பாராட்டியுள்ளார்.வடிவேலுவின் இந்தப் பேச்சு மீண்டும் அவர் அரசியல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

'வடிவேலு'  20 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பெயர். உடல்மொழி, வார்த்தை ஜாலம் என ரசிகர்களை கட்டிப்போட்ட வடிவேலின் திரை, வழாக்கைப்பயணம் என்பது அவ்வளவு எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்று அல்ல. பள்ளிப்படிப்பு வாசம் அறியாத வடிவேவுவின் உள்ளிருந்த பிறவி கலைஞன் தான் அவரின் வாழ்க்கைக்கான அடித்தளம். நாடக கலையில்  நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த வடிவேலுவின் சினிமா தாகத்திற்கு தீனி போட்டவர் நடிகர் ராஜ்கிரண். அவரின் முதல் படம்  என் ராசாவின் மனசிலே, அறிமுகப் படத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு  தனக்கான முகவரியை உருவாக்கிக் கொண்டார் வடிவேலு.  தமிழ் சினிமாவில் நகை நகைச்சுவை என்றால் கவுண்டமணி செந்தில் தான். அவர்களின் நகைச்சுவையில் கட்டுண்டு கிடந்த தமிழ் ரசிகர்களை, அதீத உழைப்பு, அபாரத் திறமையை வெளிபடுத்தி தன் பக்கம் ஈர்த்தவர் வடிவேலு. அடுத்தடுத்து தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி நகைச்சுவை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார் அவர்.

இதனால் அவர் நினைத்ததை விட அதிக உயரத்திற்கு தூக்கி அமர வைத்தனர் தமிழ் ரசிகர்கள். எப்போதும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு அரசியல் ஆசை வருவது இயல்பானதுதான். அப்படி ஒரு ஆசை 2011ஆம் ஆண்டு வடிவேலுக்கு வந்தது. தான் தோன்றும் மேடைகளில் கூட அரசியல் பேசாத வடிவேலு திடீரென அரசியல் பிரச்சாரத்திற்கு தயாரானார். அதுவரை ஒருபுறம் ஜெயலலிதாவையும், ஒருபுறம் கருணாநிதியையும் மாறி மாறி புகழ்ந்து வந்த அவர் திடீரென திமுக பிரச்சாரத்திற்கு தயாரானார். குறிப்பாக நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதல்தான் வடிவேலுவின் அந்த அரசியல் பிரவேசத்திற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்துக்கு எதிரான பிரச்சாரத்தில் களமிறங்கினார் வடிவேலு. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக ஒருபுறமும், அதிமுக தேமுதிக கூட்டணியாக மறுபுறமும் அணிவகுத்து நின்றன. அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய புறப்பட்டார் வடிவேலு. அவர் செய்த பிரச்சாரங்கள் அனைத்தும் விஜயகாந்தை குறிவைத்தே இருந்தது.

விஜயகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி கடுமையாக விமர்சித்தார் வடிவேலு. திமுக தொண்டர்கள் அவரின் பேச்சை ரசித்தாலும் வெகுஜன மக்கள் அதை வெறுப்புடன் பார்த்தனர். ஆனால் அந்த  தேர்தல் முடிவு வடிவேலுவின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே அமைந்தது. திமுக அதில் படுதோல்வி அடைந்தது. அதிமுக ஆட்சியைப் பிடித்தது, தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் வடிவேலுவின் வீட்டை தேமுதிக தொண்டர்கள் தாக்கினர். அதேபோல அதிமுக ஆட்சியை ஏற்றத்துடன் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய தடங்கல் ஏற்பட்டது. வடிவேலுவின் சினிமா எதிர்காலம் குறித்து மிகப்பெரிய கேள்வி எழுந்தது. வடிவேலு இன் அவ்வளவுதான் என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலுவிடம் ஒரு படம் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. ஒரு காலத்தில் அவரது இல்லத்திற்கு முன்பாக கால்ஷீட்டுக்காக காத்திருந்தவர்கள் கூட வடிவேலுவை தவிர்த்தனர். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தால், வடிவேலுவை ஆதரிக்க பலரும் தயங்கினர். வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் அதை வெளியிடுவதில் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் வடிவேலுவை புறக்கணித்தனர்.

இதனால் வடிவேலு வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கிடையில் வடிவேலுவின் சினிமா வாழ்க்கையை எந்த அரசியல் கட்சியும் தடுக்கவில்லை, ஆனால் அவருடைய இயல்பான குணாதிசயம் தான் அவருடைய சினிமா பயணத்தை சூனியம் ஆக்கியது என்ற எதிர் விமர்சனங்களும் எழுந்தது. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் வடிவேலு  தவித்து வந்தார். மீண்டும் வடிவேலு என்ற கலைஞர் கோடம்பாக்கத்திற்கு வருவானா இல்லையா என்ற ஏக்கம் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. இந்நிலையில்தான் பத்து ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நேராக கோட்டைக்கு சென்று முதல்வரை சந்தித்தார் வடிவேலு, முதல்வரிடம் கொரோனா நிதிக்கு 5 லட்சம் வழங்கினார். அதன் பின்னர் பேசிய வடிவேலு, விரைவில் நல்லதே நடக்கும் நம்புங்கள். தமிழக முதல்வரை சந்தித்தது நம்பிக்கை அளிக்கிறது என கூறியிருந்தார். முதல்வரின் செயல்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது, உலகமே அவரை பாராட்டுகிறது, கொரோனா தொற்றை மிக சிறப்பாக கட்டுப்படுத்தினார். ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருக்கும் என வான் அளவுக்கு புகழ்ந்தார் அவர்.

முதல்வரை சந்தித்த வடிவேலு சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி என செய்திகள் பரபரத்தன. தற்போது  மீண்டும் பழைய நிலைமைக்கு அதே செல்வாக்குடன் வடிவேலு வலம் வர ஆரம்பித்துள்ளார். மெல்ல மெல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. நாய் சேகர் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் அந்த பட சூட்டிங்கிற்காக அவர் லண்டன் சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் குணமடைந்து நல்ல முறையில் வீடு திரும்பி இருக்கிறார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளர் வடிவேலு, தமிழக முதல்வரை புகழ்ந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,  நான் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்ந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக போன் செய்து நலம் விசாரித்தார். நீங்கள் மக்களுடைய சொத்து விரைவில் குணமடைந்து விடுவீர்கள் என்று தைரியம் கொடுத்தார். அவர் கொடுத்த அந்த தைரியம் என்னை விரைவில் குணமாகி விட்டது.

அதே போல் உதயநிதி ஸ்டாலினும் போன் செய்து பேசினார். முதல்வர் ஸ்டாலின் போன் செய்வார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, தமிழக மக்களுக்கு மிக அருமையான முதல்வர் கிடைத்துள்ளார். இது மிகையல்ல இதுதான் உண்மை. முதல்வர் ஸ்டாலின் நீடூடி வாழ வேண்டும் என்று விரும்புகிறேன், எல்லாத்துறைகளிலும் சரியான அமைச்சர்கள் அதிகாரிகளை அவர் நியமித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபுவாக இருக்கட்டும், காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபுவாக இருக்கட்டும், அமைச்சர் மா. சுப்ரமணியனாக இருக்கட்டும் சரியான ஆட்களை நியமித்து இருக்கிறார் முதல்வர். அமைச்சர்  மா. சுப்பிரமணியன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம். எப்போதும் களத்தில் இறங்கி வேலை செய்கிறார். அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக செயல்படுகிறார் என அவர் பேசியுள்ளார். முதல்வருக்கு நன்றி கூறி அதையும் தாண்டி திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் அரசியல் பேசியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. அரசியலில் சினிமாவை தொலைத்த வடிவேலு மீண்டும் அரசியல் ரி என்டரியா.? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

click me!