NEET தொடர்பாக அவசர அழைப்பு: டெல்லிக்கு பறந்த ஆளுநர்!

By manimegalai aFirst Published Feb 26, 2022, 11:58 AM IST
Highlights

மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களிடம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் ஒரு தேர்வு நீட் .இந்த தேர்வு பயத்தின்  காரணமாக மாணவர்களின் தற்கொலை நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

மாணவர்களின் உயிரை காவு வாங்குகிற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக,அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்  தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட்  மசோதாவை  குடியரசு தலைவர் நிராகரித்தார்.

 இதற்கு எதிர்கட்சிகள் அதிமுகவை குற்றம்சாட்டி விமர்சித்தன. இதனையடுத்து அரசு பள்ளி மாணவருக்கு  7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை  எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார். இதன் காரணமாக 600க்கு மேற்பட்ட ஏழை மாணவர்கள் மருத்துவ  படிப்பில் சேர்வதற்கு வழி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  2021 சட்டமன்ற தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது மட்டுமில்லாமல் தேர்தல் பிரச்சாரத்திலும் கூறி வந்தது.

இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு பதவி ஏற்றதும் தமிழக சட்டப்பேரவை கூட்டி நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த தீர்மானம் தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று மாதம் முதல் 4 மாதம் வரை காத்திருப்புக்குப் பின் அந்த மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பினார். இந்த சம்பவம் தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக ஆளுநர் மாளிகையை பல்வேறு அமைப்புகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. அப்போது தமிழக ஆளுநரை பாஜக தலைவர்கள் சந்தித்து நீட் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து  தமிழக அரசு சார்பாக மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி  நடைபெற்ற சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றபட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவி கடந்த 2 ஆம் தேதி டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்கான பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது  டெல்லியில் இருந்து மீண்டும் அழைக்கப்பட்டதாகவும் இதன் அடிப்படையிலேயே தமிழக ஆளுநர் ரவி  இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் டெல்லியில் குடியரசு தலைவர்,பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தொடர்ந்து நீட் மசோதா தொடர்பாக மத்திய அரசின்  சட்ட ஆலோசகரிடம் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நீட் மசோதாவை ஏற்கனவே ஒரு முறை திருப்பி அனுப்பியதால் மீண்டும் திருப்பி அனுப்ப தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென்று கூறப்படுகிறது. எனவே நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டிய நெருக்கடி ஆளுநருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே டெல்லியில் உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தமிழக ஆளுநர் சந்தித்து பேசும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பிப்பார் என தெரிகிறது.அப்போது நீட் தேர்வு மசோதா தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஆலோசனைகளுக்கு பிறகு தமிழக ஆளுநர், குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பிவைத்தாலும் அந்த மசோதாவை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா என்ற முடிவு குடியரசு தலைவர் கையில் தான் உள்ளது. எனவே நீட் தேர்வு மசோதாவை நிராகரிக்க வேண்டிய காரணங்கள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
 

click me!