நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலை தனித்தனியாக சந்திப்பதால் பலமுனை போட்டி நிலவி வருகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு பணிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அமமுக கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாநில தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி மாற்று கட்சியில் இணைந்தனர். இதனால், அமமுக கூடாராம் காலியாகி வருகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்கவும், இருக்கின்ற நிர்வாகிகளை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் டிடிவி.தினகரன் உள்ளார். இந்த முறையாவது குக்கர் சின்னம் விசிலடிக்குமா? மக்கர் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.