ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி காரணத்தை சொல்லாதீங்க.. ஒருவழியாக மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்

By vinoth kumarFirst Published Sep 27, 2021, 1:23 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சொல்லும் காரணம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அடுத்த மாதம் தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அது முடிந்த உடன் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். டிசம்பருக்குள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறி வருகிறார். இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிடும் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தங்களுக்கு மேலும் 7 மாதங்கள அவகாசம் வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கேட்டு தலைமை நீதிபதி ரமணா அமர்வு அதிருப்தி அடைந்தது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தும் போது உள்ளாட்சித் தேர்தலை மட்டும் அப்படி நடத்த முடியாமல் போவது ஏன்? என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த போதுமான அளவிற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டதாகவும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சொல்லும் காரணம் மிகவும் மோசமாக உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

click me!