Priyanka Gandhi : பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் தலைவர்கள்.. 4 முனை போட்டி.. சாதிப்பாரா பிரியங்கா காந்தி ?

By Raghupati RFirst Published Dec 11, 2021, 1:17 PM IST
Highlights

கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

கோவாவில் வரும் 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.  பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தற்போது அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும் தனது கட்சியை கோவா வரை விரிவு படுத்தி, வரும் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். அம்மாநிலத்தில் வரும் தேர்தல் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா என பலமுனைப்போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது. கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா டிசம்பர் 10-ம் தேதியான நேற்று  பிரசாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து, பெண்களுக்கான ஆய்வுக்கூட்டம், பழங்குடி மக்களுடன் உரையாடல் நிகழ்ச்சி, மாணவர்கள் மத்தியில் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் பிரியங்கா பங்கேற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வரும் ஆண்டில் கோவா மட்டுமல்லாது பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருப்பதால் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

மேலும், பிரியங்கா காந்தியை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் வேட்பாளராக களமிறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தில் மற்ற மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் தொகுதிகளை பிரித்து கொடுத்து பொறுப்பாளர்களாக நியமிக்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்.

வருகிற 15-ந் தேதி (புதன் கிழமை) லக்னோவுக்கு மற்ற மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வருமாறு அழைத்துள்ளார். முதல் கட்டமாக சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களுக்கு உத்தரபிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் பிரித்து கொடுக்கப்பட உள்ளன. இதன் மூலம் அதிக வெற்றியை பெற முடியும் என்று பிரியங்கா எதிர் பார்க்கிறார். பிரியங்கா இந்த வியூகத்தை வகுத்துக் கொண்டிருந்த நிலையில் கோவா மற்றும் மேகாலயா மாநிலங்களில் இருந்து பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டார்கள் என்பது  குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17ல் வென்றது. ஆனால் 13 தொகுதிகளில் வென்ற பாஜக  மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரசில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகினர். அதில் பெரும்பாலானோர் பாஜகவில் இணைந்தனர். முன்னாள் முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரோ சமீபத்தில் காங்கிரசில்  இருந்து விலகி திரிணமுல் காங்கிரசில்  இணைந்தார். இந்நிலையில், மற்றொரு முன்னாள் முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து இன்று (டிச. 07) விலகினார். 

தன் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். அவரது இரண்டு மகன்கள் சமீபத்தில் பாஜகவில் இணைந்தனர். அதனால் இவரும் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி நாயக் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின்  பலம் மூன்றாகக் குறைந்து உள்ளது என்பதும் முக்கியமான விஷயம். இதனால் தான், கோவா மற்றும் உபி தேர்தலில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கி இருக்கிறது காங்கிரஸ்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பிற  கட்சிகளில் சேர்ந்தாலும், அது காங்கிரசின் வெற்றியை பாதிக்காது என்று நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார் பிரியங்கா காந்தி.

click me!