
“நாங்களும் ஊழல் செய்யமாட்டோம், யாரையும் ஊழல்செய்ய விடமாட்டோம்” என்பது பிரதமர் மோடியின் முழக்கமாக இருந்து வருகிறது, இதைத்தான் அவர் அனைத்து கூட்டங்களிலும் உறுதியாகத்த ெதரிவித்து வருகிறார்.
ஆனால், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஒருவரே அரசு அதிகாரிகளிடம் லஞ்சம் வாங்குங்கள் தவறு இல்லை, ஆனால், கொஞ்சமாக இருக்க வேண்டும் என வெளிப்படையாக அறிவுரை கூறி இருப்பது அந்த கட்சியினருக்கே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதைக் கேட்ட அதிகாரிகள் என்னசெய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறார்கள்.
இந்த சர்ச்சைக் கருத்தை உத்தரப்பிரதேச மாநில, துணை முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான கேசவ் பிரசாத் மவுரியாதான் கூறி இருக்கிறார்.
ஹர்தாய் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நேற்றுமுன்தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அதிகாரிகள் மத்தயில் அவர் பேசுகையில், “ அதிகாரிகள் ஊழல் செய்யலாம் , லஞ்சம் வாங்கலாம் தவறு இல்லை. ஆனால், சாப்பாட்டில் உப்பு சேர்ப்பது போன்று சிறிதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தவறில்லை. ஆனால், மிகப்பெரிய ஊழல்செய்தால் மட்டும் எங்களால் தாங்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து நின்றனர். அமைச்சரே ஊழல் செய்யலாம் எனக் கூறுகிறார் என்று உள்ளுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு, வெளியே காட்டிக்கொள்ளாமல் நின்றனர்.
இதற்குமுன் சமாஜ்வாதி ஆட்சியில் பொதுப்பணித்துறைஅமைச்சராக இருந்த சிவபால்சிங்கும் இதேபோன்ள அறிவுரைதான் அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறார்.
அவர் கூறிய அறிவுரையில் “ அதிகாரிகள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்துவிட்டு, கொஞ்சமாக ஊழல் செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் கொள்ளை அடிக்காதீர்கள்” என்றார்.
ஆனால், ஊழலை ஒழிக்க மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த துணை முதல்வரை ஊழல் செய்யுங்கள் எனக் கூறி இருப்பது வியப்பாக இருக்கிறது.