ஓ.பி.எஸ் மகனுக்கு கிடைக்காத மத்திய அமைச்சர் பதவி... எடப்பாடி வைத்த திடீர் ட்விஸ்ட்... பகீர் பின்னணி இதுதான்..!

By Thiraviaraj RMFirst Published May 31, 2019, 11:17 AM IST
Highlights

மத்திய அமைச்சரே வருக போஸ்டர் அடித்து விட்டு ரவீந்திரநாத் ஆதரவாளர்கள் காத்திருக்க, அமைச்சர் பதவி கொடுக்காமல் ஏமாற்றி விட்டது பாஜக. 
 

மத்திய அமைச்சரே வருக போஸ்டர் அடித்து விட்டு ரவீந்திரநாத் ஆதரவாளர்கள் காத்திருக்க, அமைச்சர் பதவி கொடுக்காமல் ஏமாற்றி விட்டது பாஜக. 

தமிழகத்தில் அதிமுக -பாஜக கூட்டணியில் வென்று தனி ஒருவனாய் நாடாளுமன்றத்திற்கு அடியெடுத்து வைக்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத். ஆகையால், ஒற்றை வெற்றியை தட்டித்தூக்கிய அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் சீட் வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்தது.  பாஜக தலைவர்களிடம் முட்டி மோதி அமைச்சரவையில் தனது மகனுக்கு ஒரு பதவியையும் கன்ஃபார்ம் செய்து சாதித்து விட்ட பெருமையோடு இருந்தார் ஓ.பி.எஸ். அங்கே தான் திடீரென புகுந்து குறுக்குசால் ஓட்டி ஓ.பி.எஸின் திட்டத்தை தரை மட்டமாக சரித்து விட்டார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். 

திடீர் திருப்பமாக தனது ஆதரவாளரான வைத்திலிங்கத்துக்கு பாஜகவிடம் அமைச்சர் பதவி கேட்டு ஓ.பி.ஆருக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார் எடப்பாடி. ’ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், டெல்லி மேலிடத்துடன் நெருக்கமாகிவிடுவார். அது தனக்கும், தனது பதவிக்கும் ஆபத்தாகி விடும். இதனால் வைத்திலிங்கத்தை அமைச்சராக்கி விடலாம். இதற்கு சம்மதிக்கா விட்டால் ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேற்றக் கூட நான் தயங்க மாட்டேன்’’ என தனது ஆதரவாளர்களிடம் குமுறி இருக்கிறார் எடப்பாடி.  

இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்ததை உணர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை ஓ.பி.எஸ் வீட்டிற்கே இரவு 11 மணிக்கு சென்றனர். நள்ளிரவு 1.30 மணி வரை ஓ.பிஎஸை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனால், அவர் விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ’பிரதமரே என் மகனுக்குத்தான் அமைச்சர் பதவி கொடுக்க விரும்புகிறார். நான் எப்படி அதை வேண்டாம் என எப்படி மறுப்பது? எனக் கேட்டிருக்கிறார்.  

இதனால் அதிகாலை வரை நடந்த சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் புதன்கிழமை இரவே டெல்லி செல்வதாக திட்டமிட்டிருந்தனர். அதற்காக டிக்கெட் பதிவு செய்திருந்தனர். ஆனால் இந்த பஞ்சாயத்தால் பயணத்தை ரத்து செய்தனர். ஆனாலும் பஞ்சாயத்தில் தீர்வு கிடைக்கவில்லை. அதன் பிறகே அமைச்சர்களை முன்பே டெல்லிக்கு அனுப்பி, ஓ.பி.எஸ்மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அதிமுகவுக்குள் கோஷ்டி மோதல் ஏற்படும். அதனை தடுக்க வேண்டுமானால் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கக்கூடாது’ என பாஜக தலைவர்களிடம் கூறி உள்ளனர்.

 

அதன் பிறகே கடைசி நேரத்தில் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவியில்லை என்கிற முடிவை பாஜக தலைமை எடுத்துள்ளது. ஆக மொத்தத்தில் நினைத்த காரியத்தை கனகசிதமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டார் எடப்பாடி பழனிசாமி.

click me!