கொரோனா: நாடு முழுவதும் 170 ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்.. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள்.. மத்திய அரசு அறிவிப்பு

By karthikeyan VFirst Published Apr 15, 2020, 8:44 PM IST
Highlights

கொரோனா பாதிப்பில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக 170 மாவட்டங்களை கண்டறிந்து பட்டியலிட்டுள்ளது மத்திய அரசு. அதில் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2900க்கும் அதிகமாகிவிட்டது. டெல்லியில் 1561 பேரும் ராஜஸ்தானில் 1304 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருந்து வந்த தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 2 நாட்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களில் வெறும் 69 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெஸ்ட் எண்ணிக்கை அதிகமாகியுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பது தமிழ்நாட்டில் பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்துகிறது. 

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பில் மின்னல் வேகத்தில் சென்ற கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. நிறைய பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், தேசிய அளவில் கொரோனா பாதிப்பின் ஹாட்ஸ்பாட்டுகளாக 170 மாவட்டங்களை கண்டறிந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த 170 மாவட்டங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பாதிப்பு 15க்கு அதிகமாகவுள்ள மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்டுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. 

அந்தவகையில், மத்திய அரசு வெளியிட்ட கொரோனா ஹாட்ஸ்பாட் மாவட்டங்களின் பட்டியலில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, நாமக்கல், மதுரை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், நாகை, சேலம், கரூர், விருதுநகர், செங்கல்பட்டு ஆகிய 22 மாவட்டங்களும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெற்றுள்ளன. 

மேலும், இந்தியாவில் 400 மாவட்டங்களில் கொரோனா தொற்று இன்னும் கணக்கை தொடங்கவில்லை. 400 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!