கொரோனா தடுப்பு நடவடிக்கை.. ஸ்டாலின் விமர்சனத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் புள்ளிவிவரங்களுடன் பதிலடி

By karthikeyan VFirst Published Apr 15, 2020, 7:08 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு திறம்பட கையாளவில்லை என்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த மாத முடிவு, மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து ஏப்ரல் 13ம் தேதி வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டிருன்றது. தினம் தினம் 80-90-100 என்கிற ரீதியில் பாதிப்பு எண்ணிக்கை தீவிரமாக இருந்தது. இவ்வளவுக்கும் அப்போது பரிசோதிக்கப்பட்ட எண்ணிக்கையும் குறைவு. 

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை படுதீவிரமாக அதிகமானோருக்கு செய்யப்பட்டு வரும் நிலையில், பாசிட்டிவ் எண்ணிக்கை குறைந்துவருவது நல்ல சமிக்ஞையாக உள்ளது. இன்று ஒரே நாளில் மொத்தம் 2739 பரிசோதனை செய்யப்பட்டதில் வெறும் 38 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 17835 நபர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 21994.

தமிழ்நாட்டில் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்ட போதிலும்,  பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பது நல்ல விஷயம். கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த சில தினங்களாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்துவந்த நிலையில், இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலடியும் கொடுத்தார்.

“தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொற்ற ஆரம்பிக்கும் முன்பாகவே, தமிழ்நாட்டில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் ஏற்கனவே 25 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் இருந்த நிலையில், இன்று கூடுதலாக ஒரு ஆய்வகத்திற்கு அனுமதி கிடைத்து அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் அதிகமான கொரோனா ஆய்வகங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் போதுமான பிசிஆர் டெஸ்ட் கிட்களும் மருந்துகளும், முகக்கவசங்களும் உள்ளன. ஏற்கனவே பிசிஆர் கிட் போதுமான அளவிற்கு உள்ள நிலையில், டாடா நிறுவனம் 40 ஆயிரம் கிட்களை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 26 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அரசு ஆய்வகத்தில் ஒருநாளைக்கு 770 டெஸ்ட்டுகளும் தனியார் ஆய்வகங்களில் ஒரு நாளைக்கு 100 டெஸ்ட்டுகளும் என மொத்தமாக தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5320 டெஸ்ட்டுகள் செய்ய முடியும்.

ஒரு நாளைக்கு 2 லட்சம் 3 அடுக்கு மாஸ்க்குகளும்  20 ஆயிரம் என்95 மாஸ்க்குகளூம் கொடுக்கப்படுகிறது. தேவையைவிட அதிகமான மாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன. வெண்டிலேட்டர்களும் தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா இன்னும் சமூக தொற்றாக பரவவில்லை. தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!