காவிரி வரைவு திட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு!! எந்த மாதிரியான வரைவு திட்டம்..?

First Published May 14, 2018, 12:19 PM IST
Highlights
union government filed cauvery draft scheme in supreme court


காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

காவிரி விவகாரத்திற்கு தீர்வுகாணும் விதமாக செயல் திட்டம் ஒன்றை வகுக்குமாறு, உச்சநீதிமன்றம் காவிரி இறுதி தீர்ப்பில் தெரிவித்தது. அந்த திட்டத்தை செயல்படுத்த 6 வார காலம் அவகாசம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மார்ச் 29ம் தேதியுடன் அந்த அவகாசம் முடிந்த நிலையில், திட்டம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை நாடியது.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திட்டம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் தான் என தமிழக அரசு தொடர்ச்சியாக தெரிவித்துவந்தது. ஆனால், கர்நாடக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. திட்டம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும், 6 வார காலத்திற்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஒன்றாக விசாரித்தது உச்சநீதிமன்றம்.

அப்போது மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி மே 3ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் தாக்கல் செய்யாத மத்திய அரசு கூடுதல் அவகாசம் கேட்டது. பிறகு 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, இன்றைக்கு வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் பாணியில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரியத்தில் ஒரு தலைவர், ஒன்பது உறுப்பினர்கள் என மொத்தம் 10 பேர் இடம்பெறுவர். அதில், மத்திய நீர்வளத்துறை செயலரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கையை நீதிமன்றம் சீராய்வு செய்யாது என தெரிவித்த உச்சநீதிமன்றம், மே 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

1966-ம் ஆண்டு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அப்போதிருந்தே பக்ரா, பியாஸ் அணைகளை இயக்கும் அதிகாரமும்,  ஏழு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும் இந்த ஆணையத்தின் கையில் வந்தது. பக்ரா அணை ஹிமாச்சல் மாநிலத்திலும், பியாஸ் அணை பஞ்சாப் மாநிலத்திலும் இருந்தாலும், அணையின் நிர்வாகம், ஆபரேஷன் மற்றும்  திட்ட பராமரிப்பு ஆகியவற்றை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம்தான் செயல்படுத்துகிறது. 

எனவே இதேபோன்றதொரு வாரியம் அமைக்கப்பட்டால், காவிரி நீரை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காவிரி வாரியத்திடம் சென்றுவிடும். எனவே பக்ரா பியாஸ் பாணியில் அமைக்கப்பட்டால் அது தமிழகம் எதிர்பார்த்த ஒரு அமைப்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது. 
 

click me!