என்னை நம்புங்கள்.. நான் கலைஞருடைய மகன்.. 100% உண்மையாக இருப்பேன்.. அக்னி ஸ்தலத்தில் கர்ஜித்த மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2021, 5:26 PM IST
Highlights

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி அதலபாதாளத்தில் சென்றுவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி அதலபாதாளத்தில் சென்றுவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

திருவண்ணாமலை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில்;- உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்! உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள்.  இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.

மலைகளால் உயர்ந்த திருத்தணி முதல் கடலால் சூழ்ந்த கன்னியாகுமரி வரை உள்ள தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்குமான அனைத்துத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொடுத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! அதனால் தான் ஒரு முறை அல்ல, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்! அத்தகைய தலைவர் தான் “சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்! - என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான்! செய்வதைத் தான் சொல்வான்! என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.

கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்கு போய்விட்டது.  இந்த அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தரப்பு மக்களுக்கும் நிம்மதியாக இல்லை.  எந்தத் தொகுதிக்கும் எந்த புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை! மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க தி.மு.க.வால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் இன்று வழங்கியிருக்கிறீர்கள்.  மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களை நான் சந்திக்கிறேன்! மக்களின் அரசாக - மக்கள் நல அரசாக- மக்கள் விரும்பும் அரசாக- மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக- மக்கள் கனவுகாணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்!

இந்த அரசாங்கம்தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள்.  என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது, ஆமாம்; கழக ஆட்சி தான் அமையும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன்.

உங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் எனக்கு புரிகிறது. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் உங்கள் முன்னால் இந்த பெட்டியில் போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது. (மேடையில் மக்கள் முன்னிலையில் கழகத் தலைவர் அவர்கள் தனது கையாலேயே மனுக்கள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியைப் பூட்டி சீல் வைத்தார்)

இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் முடிந்து, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, நான் பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்தப் பெட்டியை நானே திறப்பேன். இந்த மனுக்கள் அனைத்தும், ஏற்கனவே நான் சொன்னதுபோல, இதற்கென தனி பிரிவு அமைக்கப்பட்டு, இந்த அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் முன்னுரிமைக் கொடுத்துத் தீர்த்து வைப்பேன். கவலைப்படாதீர்கள். நான் கலைஞருடைய மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நான் கலைஞருடைய மகன். நம்பிக்கையோடு செல்லுங்கள் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

click me!