உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த போராட்டம்.. மாஸ்கோ மழைக்கு மந்தைவெளியில் குடைபிடிப்பதா.? தோழர்களை நக்கலடித்த பாஜக!

By Asianet TamilFirst Published Mar 5, 2022, 9:47 PM IST
Highlights

“உலகையே பதற்றத்திற்குள்ளாக்கி வரும் ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியும், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்."
 

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழக பாஜக கிண்டலடித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உக்கிரமடைந்தது. தற்போது தற்காலிகமாக போரை நிறுத்தியிருப்பதாக ரஷ்யா அறிவித்தது. என்றாலும் போர் பதற்றமும், இது மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்டு விடுமோ என்ற அச்சத்தில் பல நாடுகள் உள்ளன.  இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகையே பதற்றத்திற்குள்ளாக்கி வரும் ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தியும், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.

இதை வலியுறுத்தியும், ஐ.நா.சபை, நேட்டோ ராணுவ முகாமை கலைக்க வலியுறுத்தியும், தமிழக இந்திய மாணவர்களைக் காப்பாற்ற ஒன்றிய அரசும், தமிழக அரசும் எடுக்கும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 07.03.2022 திங்கள்  மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்தில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறிவிப்பை தமிழக பாஜக கிண்டலடித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “மாஸ்கோவில் மழை பெய்தால், மந்தைவெளியில் குடை பிடிக்கும் கம்யூனிஸ்ட்டுகளே, உண்மையில் உங்கள் மண்டையில் ஒன்றுமே இல்லையா?” என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!