
திமுக ஒரு கும்ப கட்சி.. அதில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைமை பதவிக்கு வர முடியும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பல காலங்களாக குற்றம்சாட்டி வருகின்றன. அதே நேரம் மு.க.ஸ்டாலின் நீண்ட அரசியல் அனுபவத்தோடு வந்திருக்கிறார் என்பது அனைவரும் ஏற்கும் விதத்திலான எதிர்வாதம். உதயநிதி விஷயத்தில் அப்படி யாரும் எதிர்வாதங்களை முன்வைக்க முடியாது. ஸ்டாலினைப் போல பல பத்தாண்டுகள் தொண்டர்களோடு களப்பணியாற்றி, அடிமட்டத்திலிருந்து உதயநிதி வரவில்லை, அவர் சினிமா நடிகராக புகழ் பெற்று, அவ்வப்போது அரசியல் மேடைகளில் தோன்றி நேராக சட்டமன்றத்துக்குள் வந்தவர் என்பதே பொதுவான குற்றச்சாட்டு. முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படி மு.க.ஸ்டாலினுக்கு படிப்படியாக பதவி உயர்வுகளை தந்தாரோ, அதே போல பொருமையாக படிப்படியாக உதயநிதியை கொண்டுவர நினைக்கிறார் மு.க.ஸ்டாலின். அதனாலேயே உதயநிதிக்கு உடனடியாக அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தரப்படவில்லை என்று சொல்கிறது திமுக தொண்டர் தரப்பு.
இந்த நிலையில் தான் உதயநிதியின் பிறந்தநாளுக்கு முன்பாக பள்ளிகல்வித்துறை அமைச்சரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் பொய்யமொழி ‘அமைச்சர் உதயநிதி’ என்ற நெருப்பை பற்றவைத்தார். "உதயநிதியின் மக்கள் சேவை ஒரு தொகுதியோடு சுருங்கி விடக் கூடாது" என்று அவர் சொன்னது ஒரு நீண்டகால செயல்திட்டத்தின் தொடக்கமே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக சசிகலா பதவிக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி அதனை அவர் ஏற்று, கட்சியின் நலனுக்காக பதவியை ஏற்கிறேன் என்பதாக அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. அதேபோல உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் தருவதையும் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இதனை மீடியாக்களை வைத்தே செயல்படுத்த திட்டமாம்.
அதாவது, அன்பில் மகேஷ் பொயாமொழி, உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று சொன்னால் அது தலைப்புச் செய்தியாகும், பின்னர் மீடியாக்களே அது பற்றி பேசியும், விவாதித்தும், கேள்வி எழுப்பியும் பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார்கள். அதன்படியே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது , மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் தன்னால் கூட உதயநிதி அளவுக்கு மக்கள் பணி செய்ய முடியவில்லை என்றும், அவரை அமைச்சராக்க வேண்டும் என்றும் பேசினார். இதில் யாருமே எதிர்பார்க்காத விஷயம் தான் காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்.
எங்கள் அனைவரையும் விட உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கும் ஆழ்ந்த அரசியல் அறிவு, மக்களோடு அவருக்கு இருக்கும் நெருக்கம், கட்சியினரோடு இருக்கும் பிடிப்பு இதையெல்லாம் மதிப்பீடு செய்து துணை முதல்வர் பதவியை வழங்கவேண்டும். கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகிய இரண்டு தலைவர்களுடனும் சிறுவயது முதலே வளர்ந்து அவர்கள் அரசியல் திறனை உதயநிதி உள்வாங்கியுள்ளார் என்கிறார் ராஜன். நாம் கூட உதயநிதி அமைச்சராக வேண்டும் என்றுதான் சொல்கிறோம், ஆனால் காங்கிரஸை சேர்ந்த ஒரு மாநில நிர்வாகி துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கே கடிதம் எழுதுகிறாரே என்று திமுகவினரே ஆச்சர்யப்படுகின்றனர். இனி அதிகமான குரல்கள் உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என்று எழத்தொடங்கும், மீடியாக்களில் தொடர்ந்து இது பற்றிய செய்திகள் வரத்தொடங்கும். அதன் பிறகு உதயநிதிக்கு பதவி வழங்கப்பட்டாலும் அது மக்களுக்கு பழக்கப்பட்ட விஷயமாகவே இருக்கும், வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக எழாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல அடுத்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவிற்குப் பிறகு நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.