ஒரே நாளில் 100 ரசிகர் மன்றம்! அரசியலில் சுறுசுறுப்பாகும் உதயநிதி!

By vinoth kumarFirst Published Nov 4, 2018, 10:07 AM IST
Highlights

கடந்த ஒரு மாத காலமாவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதயநிதிக்கு ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 100 ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 100 ரசிகர் மன்றங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் தி.மு.க தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தான் அவரது மகனான உதயநிதி அதிக நிகழ்ச்சிகளில் தலைகாட்ட ஆரம்பித்தார். 

உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தி.மு.க நிர்வாகிகள் அதிகம் செலவு செய்ய ஆரம்பித்தனர். பிரமாண்ட கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் தி.மு.க ஆலோசனை கூட்டம் தொடர்பான பேனர்களில் கூட உதயநிதி ஸ்டாலின் படம் இடம்பெற்றது. இது சர்ச்சையான நிலையில் தன்னுடைய படங்களை தி.மு.க ஆலோசனை கூட்டங்களுக்கு வைக்கப்படும் பேனர்களில் வைக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்று தற்போது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் உதயநிதியின் படங்கள் இடம்பெறுவதில்லை. 

உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அவரது புகைப்படத்துடன் தி.மு.கவினர் பேனர்கள் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் விரைவில் தி.மு.கவில் முக்கிய பொறுப்பை பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சரியான நேரத்தை பார்த்து ஸ்டாலினும் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் தனக்கு என ஆதரவு வட்டத்தை உருவாக்க உதயநிதி செயல்பட்டு வருகிறார்.

 

அதாவது இளைஞர் அணி மூலம் ஸ்டாலின் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கியது போல தனது ரசிகர் மன்றம் மூலமாக உதயநிதி தனக்கான ஆதரவாளர்களை அடையாளம் காண முடிவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதயநிதிக்கு ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 100 ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
  
ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவரும் திருவெறும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த ரசிகர் மன்றங்களை திறந்து வைத்துள்ளார். மேலும் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே தி.மு.கவினராக இல்லாமல் இருந்தால் நல்லது என்கிற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர்களும் தி.மு.கவை சேராதவர்களுக்கே வழங்கப்படுகிறது. இதன் மூலம் தனக்கென ஒரு ஆதரவாளர் வட்டத்தை ஏற்படுத்தி அரசியலில் சுறுசுறுப்பாக இயங்க உதயநிதி ஆயத்தமாகி வருகிறார்.

click me!