சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல! வெளுத்து வாங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் !!

By Selvanayagam PFirst Published Nov 4, 2018, 9:13 AM IST
Highlights

சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர்  காட்டமாக தெரிவித்தார்.

மும்பை, பாந்த்ராவில் ‘ஜனநாயகத்தில் மறுப்பிற்கான இடம்’என்ற அனைத்திந்திய தொழில் நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி செல்லமேஸ்வர் , என்னை நல்ல நீதிபதியாக நினைவில் கொள்ள வேண்டும் , மோசமான இந்திய தலைமை நீதிபதியாக அல்ல’’ என தெரிவித்தார்.

ஏ.ஐ.பி.சி. சேர்மன் சஞ்சய் ஜாவுடன் அவர் உரையாடிய போது சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு விவகாரம் முதல் சிபிஐ எப்படிச் செயல்படுகிறது என்பது வரை வெளிப்படையாக அவர் விவாதித்தார். மேலும் சிவில் சமூகம் தனக்குச் சரியென படாதவற்றுக்கு மறுப்பு, எதிர்ப்பு தெரிவிக்க மேடை வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விவகாரம் பற்றி அவர்கூறும்போது, ‘‘சில நல்ல மனிதர்கள் என்னிடம், நீ இப்போதாவது இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். பிரச்சனை என்னவெனில் ஒரு வழக்கை இன்ன பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டும் என்று பட்டியலிடப்பட்டிருந்தால் அதனை அந்த பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டும்.

ஆனால் ஒரு இரவில்ஒரு வழக்கு ஒரு நீதிபதியிடமிருந்து இன்னொரு நீதிபதிக்குச்செல்கிறது. ஆகவே வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை உணர்ந்தே செய்தியாளர்களைச் சந்தித்தோம்’’ என்றார்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய தீர்ப்பு ஒன்றில் தான்மட்டும் ஏன் எதிர்நிலை எடுத்தேன் என்பதை விளக்கிய செலமேஸ்வர், ‘‘நான் சட்டம் படிக்கும்மாணவனாக இருந்த காலத்திலேயே நீதிபதிகள் நியமனத்தில் அரசு தலையீடு இருக்கக் கூடாதுஎன்று கூறியவன்.

அரசு கூறட்டும்.ஆனால் அவர்கள் கட்டுப்படுத்தக் கூடாது. தீர்ப்புகளை அமல்படுத்த அரசு தேவை, ஆனால் அரசுகள் இதனைச் செய்யவில்லை எனில் நீதிபதிகள் அதில் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார்.சிபிஐ குறித்து அவர் கூறும்போது, ‘‘அனைவரும் சிபிஐதான்சில விவகாரங்களை விசாரிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அது ஒன்றும் புனிதமான அமைப்பு அல்ல என்றார்.

அதில் முறையான சட்ட விதிமுறைகள் இல்லை. அரசியல் கட்சிகள்தான் இதற்குப் பொறுப்பு. சிபிஐ-யை அனைத்துக் கட்சிகளும் ஒருசாதனமாகவே பயன்படுத்துகின்றன’’ என்று கூறிய செல்லமேஸ்வர், ‘‘எதிர்க்க வேண்டியதை எதிர்க்காமல் மவுனம் காத்தால் நாம் நம்மைத்தான் குற்றம்சாட்ட வேண்டும். மவுனம் காப்பவர்களுக்கு நரகத்தில் எரியும் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் அவர் தனது பேச்சை  முடிக்கும் போது, ‘‘பிரச்சனைகள் எழுவதற்குக் காரணம், நாம் நம்தேசப்பிதாவை மறந்து விட்டோம் என்பதே. நாம் உண்மையைப் பேசமறந்து விட்டோம். உண்மைதான் முதல் தியாகம், அதனை அனைவரும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்’’ என்றார்.

click me!