தென் சென்னை தொகுதியில் உதயநிதி.. திமுகவினருக்கு வந்த ஆசை!

By Arun VJFirst Published Mar 2, 2019, 2:07 PM IST
Highlights

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் திமுகவினர் விருப்ப மனு அளித்தார்கள்.

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி போட்டியிடக்கோரி அவருடைய ரசிகர் மன்றம் சார்பில் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டன. இது திமுக வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ‘தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை; தேர்தலில் போட்டியிடுவதை கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று உதயநிதி ஸ்டாலின்  பின்னர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் திமுக சார்பில் பெறப்பட்டுவருகின்றன. திமுகவினர் ஆர்வமாக விருப்ப மனுக்களை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். இதேபோல வாங்கிச் சென்றவர்கள் விருப்ப மனுக்களை அறிவாலயத்தில் சமர்பிக்கவும் செய்கின்றனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடக்கோரி திமுகவினர் நேற்று சமர்பித்த விருப்ப மனு திமுக வட்டாரத்தில் ஹைலைட்டானது. திமுக  தொண்டர்கள் சார்பிலும் அவரது ரசிகர்கள் சார்பிலும் இந்த விருப்ப மனு அளிக்கப்பட்டது. 

இதேபோல மு.க.ஸ்டாலின் பெயரிலும் தேர்தலில் போட்டியிடக் கோரி திமுகவினர் விருப்ப மனு அளித்தார்கள். 2009-ஆம் ஆண்டு மு.க. அழகிரி எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்ட மதுரை தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு அளித்தார்கள். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணன் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து விருப்ப மனு அளித்தார். இதேபோல நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை சமர்பித்தார்கள்.    

 

click me!