தேமுதிகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? அதிமுக வழங்கும் அற்புதமான ஆஃபர்!

By Asianet TamilFirst Published Mar 2, 2019, 1:48 PM IST
Highlights

 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இணைவது என மதில் மேல் பூனையாக இருந்த தேமுதிக, அதிமுக பக்கம் குதிக்க தயாராகிவிட்டது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டும் தொகுதிகள் வரை அதிமுக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் இணைவது என மதில் மேல் பூனையாக இருந்த தேமுதிக, அதிமுக பக்கம் குதிக்க தயாராகிவிட்டது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டும் தொகுதிகள் வரை அதிமுக முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.


நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்மரம் காட்டிவந்தன. கடந்த ஒரு வார காலமாக தேமுதிகவின் நிலைப்பாடுக்காக திமுக, அதிமுக என இரு கட்சிகளும் காத்திருந்தன. 7+1 என தேமுதிக கேட்ட தொகுதிகளைக் கண்டு அதிமுக அதிர்ச்சியானது. திமுக தரப்பில் 3+1 எனப் பேசப்பட்டது. இதில் எது சிறந்த கூட்டணி என கடந்த சில நாட்களாக கேப்டன் குடும்பத்தில் விவாதம் நடந்துவந்தது. கடந்த முறை பாமக குழிப் பறிப்பு வேலை செய்தாலும், இந்த முறை பாமக இடம் பெற்றிருக்கும் அதிமுக கூட்டணியே மக்கள் நலக் கூட்டணி என்ற முடிவுக்கு தேமுதிக வந்துவிட்டது. திமுக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவிடம் பேசப்பட்டுவந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தையிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  


எனவே அதிமுக கூட்டணியை கேப்டன் ‘டிக்’ செய்துவிட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாமகவுக்கு வழங்கப்படும் தொகுதிக்கு இணையாக வழங்க வேண்டும் என்ற முரட்டு பிடிவாதத்திலிருந்து இறங்கிவந்திருக்கும் தேமுதிக, 5+1 என்று அதிமுக வழங்கும் ஆபஃரை ஏற்க முடிவு செய்துவிட்டதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டதில், 12 சதவீதம் தர அதிமுக ஏற்றுக்கொண்டதாகவும் தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.

டிமாண்டுகளை அதிமுக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இது பற்றி கட்சியினருடன் கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு செல்வது என தேமுதிக முடிவு செய்துவிட்ட நிலையில்,  கூட்டணி தொடர்பாக தனது முடிவை விஜயகாந்த் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

பிரதமர் நரேந்திர மோடி வரும் 6-ஆம் தேதி வண்டலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதால், அன்று கூட்டணி தலைவர்களையும் மேடையேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள்ளாக தொகுதி உடன்பாடு மட்டுமல்ல, தொகுதிகளையும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக அணியில்  தேமுதிகவுக்கு வட மாவட்டங்களில் இரண்டு தொகுதிகள், தென் மாவட்டம், மத்திய மாவட்டம், மேற்கு மாவட்டத்தில் தலா ஒரு தொகுதி என ஐந்து தொகுதிகள் ஒதுக்க அதிமுக தரப்பு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தேமுதிக அதிமுக பக்கம் சாய முடிவு செய்துவிட்ட நிலையில், திமுக, அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் நிலைக்கு வந்துவிட்டது.

click me!