மகாராஷ்ட்ரா முதலமைச்சரானார் உத்தவ் தாக்ரே !! சோனியா, ராகுல் ஆப்சென்ட் !!

By Selvanayagam PFirst Published Nov 28, 2019, 9:10 PM IST
Highlights

மகாராஷ்ட்ரா  முதலமைச்சராக உத்தவ் தாக்கரே முறைப்படி இன்று பதவியேற்று கொண்டார்.  அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந்தேதி அதிகாலை 5.37 மணிக்கு மகாராஷ்ட்ராவில்  ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும். அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.

அவசரகதியில் பதவி ஏற்ற பாரதீய ஜனதா அரசின் ஆயுள் வெறும் 4 நாட்களில் முடிந்து போனது. இதனால் அந்த கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.

இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார்.  அவருக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது உத்தவ் தாக்ரே பொது மக்களைப் பார்த்து தரையில் விழுந்து வணங்கினார்.
.

அவரைத் தொடர்ந்து  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  தலா இருவர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களான அஜித் பவார், சகன் புஜ்பால் மற்றும் பிரபுல் பட்டேல் கலந்து கொண்டனர்.  மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மந்திரி டி.ஆர். பாலு, காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.  இதுபற்றி உத்தவ் தாக்கரேக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.  முதலமைச்சராக பதவியேற்கும் உத்தவ் தாக்கரேக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

click me!