தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண நிதியை தாருங்கள் என்று தான் கேட்கிறோம். இதைக்கேட்டால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோபம் வருகிறது. தர முடியாது என்கிறார். பேரிடரே இல்லை என்கிறார். போதாதற்கு எனக்கு மரியாதை பற்றியும் – பாஷை பற்றியும் பாடம் எடுக்கிறார் என உதயநிதி விமர்சித்தார்.
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உதயநிதி
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் பெருவிழா கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மத போதகர்கள் பேராயர்கள் உள்ளிட்ட அனைவர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள், மேலும் 2100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, நீங்கள் என்னை கிறிஸ்துவராக நினைத்தால் நான் கிறிஸ்தவர் என்றும், இந்துவாக நினைத்தால் இந்து என்றும், இஸ்லாமியராக நினைத்தால் இஸ்லாமியர் என்றும் தெரிவித்தார். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கொள்கையை கொண்டவர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு, அவசர நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்காமல் மாற்றான் தாய் மனதோடு செயல்பட்டு வருகிறது.
கேட்டது என்ன.? கிடைத்தது என்ன.?
நிதி ஒதுக்கீடு என்று வரும் போது, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. 2015 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களின் போதெல்லாம் மொத்தம் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் 5 ஆயிரத்து 300 கோடி ரூபாய் தான். அதாவது நாம் கேட்டதில் இருந்து வெறும் 4.6 சதவீதம் தான் ஒன்றிய அரசு நமக்கு கொடுத்துள்ளது. தற்போது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெய்த அதி கனமழை பாதிப்பை தொடர்ந்து தற்காலிக நிவாரண நிதியாக 7 ஆயிரம் கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12 ஆயிரத்து 659 கோடி ரூபாயும் கழக அரசு கேட்டது.
ஒரு ரூபாய் கூட ஒதுக்காத மத்திய அரசு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்டப் பாதிப்புகளுக்கு அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளார்கள். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 700 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. குறிப்பாக, 2021-ல் குஜராத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. மறுநாளே அங்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, அம்மாநில அரசுக்கு ரூ.1000 கோடியை ஒன்றிய அரசு சார்பில் அறிவித்தார். மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார்.
அதிக வரி கொடுத்த தமிழக அரசு
ஆனால், தமிழ்நாட்டின் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கேட்ட நிதியையும் வழங்கவில்லை. தமிழ்நாட்டின் பக்கம் அவர் எட்டிப்பார்க்கவும் இல்லை. ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் திரும்பி வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் கோடியை ஜி.எஸ்.டி-யாக தமிழ்நாடு செலுத்தியிருக்கிறது. நமக்கு இந்த ஆண்டு மொத்தமே 900 கோடி State Disaster Relief Fund-ல் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 3 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி கட்டிய மத்திய பிரதேசத்துக்கு 1000 கோடி ரூபாய் State Disaster Relief Fund-ல் இருந்து வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாடு 5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி கொடுத்துள்ளது. ஆனால், நமக்கு திருப்பி கிடைத்தது வெறும் 2 லட்சம் கோடி ரூபாய் தான்.
பாரபட்சம் பார்க்கும் மத்திய அரசு
ஆனால், உத்தரபிரதேசம் செலுத்திய வரியே 2 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், அவர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, நேற்றுக் கூட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வரிப்பகிர்வு வழங்கியிருக்கிறது. எவ்வளவு கொடுத்துள்ளார்கள்? உத்தரபிரதேசத்துக்கு 13 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 2 ஆயிரம் கோடி. இந்த பாரபட்சத்தை தான் நாம் கேள்வி கேட்கிறோம் என உதயநிதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்