2 மாதத்தில் ரூ.4.9 லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கோம்: நிர்மலா சீதாரமன் தகவல் ....

By Selvanayagam PFirst Published Dec 4, 2019, 11:07 PM IST
Highlights

வாடிக்கையாளரை தேடி வங்கி சேவை திட்டத்தின்கீழ், பொதுத்துறை வங்கிகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் மொத்தம் ரூ.4.9 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளன. 

மந்தகதியில் கிடக்கும் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்கும் மற்றும் கடன் வழங்கும் நடவடிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பரில் வாடிக்கையாளர்களை தேடி வங்கி சேவை என்ற திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டத்தின்படி, குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதிசேவை நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தனிநபர் மற்றும் விவசாய துறையை சேர்ந்தவர்களுக்கு, விவேகமான கடன் விதிமுறைகளில் எந்தவித சமரசமும் இல்லாமல் பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கின.
வாடிக்கையாளர்களை தேடி வங்கி சேவை திட்டத்தின்கீழ், பொதுத்துறை வங்கிகள் கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் ரூ.4.9 லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளன. 

இதில் கடந்த அக்டோபர் மாதத்தில் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.5 லட்சம் கோடி கடன் வழங்கின. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் ரூ.2.4 லட்சம் கோடி கடன் வழங்கின.

பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களை தேடி வங்கி சேவை திட்டத்தை நாடு முழுவதுமாக மொத்தம் 400 மாவட்டங்களில் 2 கட்டங்களாக செயல்படுத்தியது. 

கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக சரிவடைந்ததையடுத்து, பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கும் திருப்ப மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் ஒன்றுதான் இந்த வாடிக்கையாளர்களை தேடி வங்கி சேவை திட்டம்.

click me!